கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் அரசோ மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக அரசின் மது வணிகத்திற்கும் மக்கள் தங்கள் தலையை அடமானம் வைக்கவேண்டும் என்று முரண்டு பிடிப்பது, அதை அசிங்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் பதிகை செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் மேல் முறையீடு வேண்டாம் என வேண்டுகோள் வைத்தும் தமிழக அரசு அதை அலட்சியம் செய்து மேல் முறையீடு செய்துள்ளதால் மக்கள் நடுவே அது அசிங்கப்பட்டு போயிருக்கிறது. குடியர்கள் வேண்டாம் என்றால் கூட, இந்த அதிமுக அரசு மதுவிற்பனையை விடாது, என்று இணையத்தில் பகடி ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைமுறையின்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மூன்று நாட்கள் கடந்து வியாழக்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக விலகல் கேள்விக்குறியாகும், கரோனா தொற்று பரவும் என உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம் மதுக்கடைகள் திறக்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த உயர் அறங்கூற்றுமன்றம் தனி நபர் இடைவெளி, ஆதார் அட்டை, பற்றுச்சீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. நிபந்தனை மீறப்பட்டால் தடை செய்ய நேரிடும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் குடியர்கள் அடித்துப் பிடித்து முண்டியடித்து ரூ.294.5 கோடிக்கு மதுவகைகளை வாங்கினர். குற்ற நிகழ்வுகள் ஒரே நாளில் அதிகரித்தன. சமூக விலகலின்றி கும்பல் கும்பலாகக் கூடி மதுபானங்களை வாங்கினர். இதுகுறித்த பொதுநல வழக்கை மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த சிலர் பதிகை செய்தனர். அதில் வழக்கை விசாரித்த வினீத் கோத்தாரி அமர்வு, இன்னும் ஒரு கிழமை ஊரடங்கு நாள் வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டது. இந்நிலையில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் பதிகை செய்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



