Show all

கொரோனாவிற்கு இணையாக பேசுபொருளாகி வரும் தலைப்பு! புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் நேற்று புறப்பட்டன மூன்று சிறப்புத் தொடர்வண்டிகள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளத்தில் போராட்டம். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சரக்கு தொடர்வண்டி மோதி 17பேர்கள் பலி. இப்படி பற்பல.

 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அழைத்து செல்வதற்கு ஏற்கனவே காட்பாடி தொடர்வண்டி நிலையத்திலிருந்து முதல் சிறப்பு தொடர்வண்டி புறப்பட்டது.

அதேபோல நேற்று மூன்று சிறப்பு தொடர்வண்டிகள் கோவை மற்றும் காட்பாடி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து சென்றன. தொடர்ந்து பத்து சிறப்பு தொடர்வண்டிகளை ஐந்து நாட்களில் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ,

ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு தொடர்வண்டிகள் இயக்கப்பட தமிழக அரசு தொடர்வண்டித் துறையிடம் வெளி மாநிலத்தவர்களின் பட்டியலை வழங்கி அதன் அடிப்படையில் முதற்கட்டமாக  10 சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களையெல்லாம் கடந்த 44 நாட்களாக தமிழகத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் என்ன என்ற கேள்வி, பொதுவாக சிந்திக்கிற நபர்களிடம் எழுவது இயல்பு.

மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் நேற்று- தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புசாவல் நோக்கி தொடர்வண்டித் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். 
 
தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்தத் தொடர்வண்டியும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து தூங்கி உள்ளனர். இன்று அதிகாலையில் சரக்கு தொடர்வண்டி வந்தபோது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அவர்கள் மீது  தொடர்வண்டி மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 17 பேர்கள் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது இரண்டு நாட்களுக்கு முந்தைய புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த செய்தி.

புலம்பெயர் தொழிலாளர்கள், வண்டி வாகனம் இல்லாமல், தங்கள் ஊருக்கு நடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டவர்களில், தங்கள் மாநிலம் சென்று சேர முடியாமல் இதுவரை 42 பேர்கள் மரணம் அடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது மூண்ட வன்முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கூடங்குளம் காவல் நிலையக் காவலர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 10000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பின்பு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .

கடந்த ஒரு கிழமைக்கு முன்பு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஏப்ரல் 30-ம் தேதி கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஆண்டாண்டு பராமரிப்புப் பணிக்காக முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் இருப்பவர்கள் இந்த ஆண்டாண்டு பராமரிப்புப் பணியின்போது கதிரியக்கத் தன்மை கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் மாற்றப்படும்போது தங்களது உடலுக்கு ஏதேனும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் போதுமான அளவு தண்ணீர், குடி தண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லாமையே காரணம் காட்டி உடனடியாக வட மாநிலத்தில் உள்ள எங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி ஒப்பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தனர்.

ஒப்பந்த நிறுவனங்கள் இதுபற்றி எதுவும் முடிவு எடுக்காத நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணுமின் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த முறை ஏற்பட்ட போராட்டம் சுமுகமாக முடித்துவைக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தில் வன்முறை தலைதூக்கியுள்ளது. இதனால், கூடங்குளத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

கடந்த ஆட்சிகால காங்கிரசும் சரி, நடப்பு ஆட்சிகால பாஜகவும் சரி ஹிந்தி மொழியை மற்ற மாநிலத்தவர்கள் கற்றுக் கொள்ள எல்லையில்லாமல் செலவழிக்கிறது. 

ஆனால் ஹிந்திபேசும் மக்களுக்கு அடிப்படை கல்விகூட அளிக்காமல், எண்பது விழுக்காட்டு மக்களை இந்தியா முழுக்க நடோடிக் கூலிகளாக அலையவிட்டிருக்கிறது. 

இந்தக் கொரோனாவில்- புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒரு பாடம் கற்று, தன்மாநிலத்தில் இருந்து கொண்டு எனக்கான கல்வியைக் கொடு! எனக்கான வேலையைக்கொடு! எனக்கான வாக்குகளை நானே போடப்போகிறேன்! இனி வாக்கு இயந்திரங்களையோ கட்சித் தொண்டர்களையோ போட அனுமதிக்க மாட்டேன் என்று போராடினால், இந்தக் கார்ப்பரேட் பினாமிகள் ஆட்சி இந்தியாவில் ஒழிந்து, மக்கள் அரசாக இந்தியா செழிக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.