06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மே 17அமைப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய நினைவேந்தல் நிகழ்வில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் படத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி நடந்துவந்து அவர்கள் முழக்கமிட்டனர். நினைவேந்தல் நிகழ்வின்போது திருமுருகன் காந்தி, இறந்த தமிழ் சொந்தங்களுளாக, ஒரு நிகழ்வை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுப்பது மனித உரிமை மீறல் என்றார். இறந்தவர்களை நினைவு கூர கடலுக்கு சென்று நினைவேந்தலை நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்படும் தமிழ் மரபு. இதற்கு அரசு அனுமதி மறுப்பது குற்றமாகும். செயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் போன்ற இடங்களில் நினைவேந்தல் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த நிகழ்வுக்கு அரசின் அனுமதி தேவையில்லை, இந்த ஆண்டு புதுக்கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நிகழ்வின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்த முடியும் என்பது சாத்தியமாகியுள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மெரினா கடற்கரையில் நடத்துவற்கு ஏன் தடை விதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணை போனதாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை நாங்கள் நிறுவி வந்துள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் இங்கு நினைவேந்தல் நடத்த தடை விதிக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், இங்கு இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் எடுத்துச்செல்வோம் என்று தெரிவித்தார். நிகழ்வில் பங்கேற்ற வைகோ, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் எத்தனை தடைகள் வந்தாலும், இளைஞர்கள் பலர் உணர்வு ரீதியாக இந்த நிகழ்வில் பங்குபெறுவதை தடுக்கமுடியாது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். ஐஸ்ஹவுஸ் பகுதியில், பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி வந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



