ஆம் முகிலன் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத விடுகதைதான். சுற்றுச் சூழல் ஆர்வலராக இயங்கி வந்தவர், 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து வலையொளியில் வெளியிட்டு இதழியலாளர் ஆன பிறகு, காணாமல் போன முகிலன் குற்றவாளியாக மீட்கப் பட்டிருக்கிறார்; அதுவும் பாலியல் குற்றசாட்டில். 23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன முகிலன் திருப்பதி தொடர்வண்டி நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டதை அடுத்து, அவரை சென்னைக்கு கொண்டுவந்த தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி தொடர்வண்டி நிலையத்தில், நடுவண் மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஆண் நபர் ஒருவரை தொடர்வண்டி பாதுகாப்புப்படை பிரிவினர் அப்புறப்படுத்த முயன்றபோது அவர் அங்கிருந்து விலக மறுத்ததாகவும் விசாரித்தபோது அவர் தனது பெயர் முகிலன் என்றும் வேலூர் காட்பாடிக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் நேரடியாக பார்த்து அவர் காணாமல் போன முகிலன் தான் என்பதை உறுதி செய்தனர். பின் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை எழும்பூரில் உள்ள குற்றபிரிவு குற்றபுலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். முகிலனிடம் அவர் காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்பது குறித்து கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார். என்று கூறப்பட்டுள்ளது. முகிலன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அறங்கூற்றுமன்ற காவலுக்கு முகிலன் உட்படுத்தப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகிலனின் மனைவி பூங்கொடி இது ஒரு பொய் குற்றச்சாட்டு என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,207.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.