கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்து முதல் முறையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு காலக் கட்டங்களில் பல விதமாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. திருமணம், காதணி விழா, புதுமனைப் புகு விழா என்று தனிமனிதன் மற்றும் குடும்பம் சார்ந்த விழாக்கள் அனைத்திலும், தமிழ்ச் சமூகத்தின் சிறு ஒத்துழைப்பாக இந்த மொய்விருந்து முன்னெடுக்கப் பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டத்தின் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொய்விருந்து என்பதே ஒரு விழாவாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 20,000 பேர் வரையிலும் மொய்விருந்து கணக்கு வைத்துள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கி, சிரமப்படுவார்களுக்கு சிறு உதவியாகத் தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து- இன்று பேருதவியாக கோடிக் கணக்கில் பணம் திரளும் திருவிழாவாக உருவெடுத்துவிட்டது. பணம் எண்ணுவதற்கு இயந்திரம், பந்தலைச் சுற்றி கண்காணிப்புக் படப்பிடிப்புக் கருவிகள், மொய் எழுதும் இடங்களில் வங்கி சேவை மையம், தனியார் பாதுகாப்பு காவலர்கள் எனக் கடந்த சில ஆண்;டுகளாகவே மொய்விருந்து விழா முற்றிலும் எண்ணிம மயமாகி வருகிறது. அதே போல மறுபுறம் மொய் விருந்து திருவிழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கம கம கறி விருந்தும் சிறப்படைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆடி மாதம் கிருஷ்ண மூர்த்தி என்பவர் முன்னெடுத்த மொய்விருந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. சுமார் 1,000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு ஆயத்த நிலையில் இருந்தது. 100 பணியாளர்கள் மொய் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர். சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு மொய்ப் பணத்தை எழுதிவிட்டுச் சென்றனர். முடிவில் வசூலான மொய்ப்பணம் எண்ணப்பட்டது. இதில், உழவர் கிருஷ்ண மூர்த்திக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலானது. கடந்த ஆண்டில் தனி ஒருவருக்குக் கிடைத்த அதிகபட்ச மொய் வசூல் என்று பாராட்டப் பட்டது. இந்த நான்கு கோடி என்பது: கடந்த ஐந்து ஆண்டுகளாக பலருக்கும் இவர் வைத்த மொய்யும், இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இவர் அடைக்க வேண்டிய மொய்யுமாகும். இந்த தொகைக்கு வட்டியெல்லாம் இல்லை. ஆனால் அவருக்கு கிடைத்த கடனுதவிக்கு, ஒரு சேவைத் தொகையாக அவர் விருந்து செலவிடும் தொகை அமையும். இது பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தில் உலாவரும் கடனுதவி ஒத்துழைப்பு நிருவாகம் ஆகும். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புடனும், கனவுகளுடனும் மொய்விருந்து நடத்த வேண்டியவர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நுண்நச்சுத் தொற்று பரவல் ஏற்பட்டு, ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் மொய் விருந்து விழா நடத்த இருந்தவர்களின் கனவு தகர்ந்து போனது. கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஒரு மொய் விருந்து கூட நடத்தப்படவில்லை. இது குறித்து இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த காத்திருப்பவர்கள் கூறுகையில், விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மொய் விருந்துகளில் மொய் செய்து, 5 ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்தி மொத்தமாக வசூல் செய்வது வழக்கம். அந்த பணத்தை அவர்கள் திருமணம், தொழில், விவசாயம், கல்வி போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கஜா புயல் விவசாயத்தை அழித்தது. அதனால் கடந்த ஆண்டு மொய் விருந்து முடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விவசாய பொருட்கள், வாழைத்தார்கள் போன்றவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு மொய் விருந்துகளை இதுவரை தொடங்க முடியவில்லை. தொடங்கினாலும் விவசாயிகள் மொய் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த இருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வருகிற தை மாதம் முதல் படிப்படியாக மொய் விருந்துகள் நடத்த ஆலோசித்து வருகிறார்கள். அந்த நேரத்திலும் மொய் வசூல் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



