Show all

அஜித் மற்றும் சிம்பு நடித்த அந்தப்படங்களைப் பார்க்கவேண்டாமா- ஏன்? விளக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கிய, என்னை அறிந்தால் மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஏனாம்?

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. திரையுலகப் படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், திரைப் பேரறிமுகங்கள் பலர் வீட்டில் இருந்தபடியே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன், விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் படங்கள், புத்தகங்கள் படிக்க அறிவுறுத்திய அவர், தான் இயக்கிய என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

ஏனெனில் அந்த இரண்டு படங்களிலும் நாயகன் ஊர் ஊராக சுற்றுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், ஆகையால் அந்த இரு படங்களும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்காது என்று கூறியுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் அஜித்தும், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்குமாறு கூறினார். அப்படத்தில் சூர்யா உடற்பயிற்சி செய்வது போன்று நீங்களும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என கவுதம் மேனன் அந்த காணொளியில் கூறியுள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.