12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிராம அவைக் கூட்டம் என்பது- இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள், இந்திய விடுதலை நாள், மற்றும் காந்தி பிறந்தநாள் ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது; கூட்டப் படவேண்டும். இந்தக் கிராம அவைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம அவைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம அவைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். கிராம அவைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம அவைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10 விழுக்காடு வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம அவைக் கூட்டம் நடத்தலாம். கிராம அவைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம அவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது. மக்களோடு ஐக்கியமாவதற்கான சட்டப் படியான இந்த அரிய வாய்ப்பை திமுக தோன்றிய காலத்தில், திமுக மட்டுமே பயன் படுத்திக் கொண்டது. அப்புறம் இந்த அரிய வாய்ப்பை பெரிதாக எந்தக் கட்சியும் பயன் படுத்திக் கொள்ள வில்லை. அந்தக் கூட்டத்திற்கு மக்களைத் திரட்டி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களோடு ஐக்கியமாவதற்கு கமல் இந்த வாய்ப்பை கண்டு கொண்டது நல்ல தொடக்கம் தான். ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் நேற்று மாதிரி கிராம அவைக் கூட்டத்தை கமல் நடத்தினார். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: வரும் தொழிலாளர் நாள் அன்று கிராம அவைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும், நடத்த நினைவுபடுத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மடல் அனுப்பியுள்ளோம். அன்று நானும் ஏதாவது ஒரு கிராமஅவைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் அந்தந்த கிராம அவைக் கூட்டங்களில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியை தாண்டும். ஆனால், அதை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பது தான் கேள்வி. அந்த தொகை சரி வர செலவிடப்படுகிறதா என்று கிராம அவைக் கூட்டத்தில் மக்கள் கேட்க முடியும். அவ்வாறு மக்கள் கேட்டால் ஊழல் ஒழியும். கேரளாவில் உள்ளது போன்று பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்களுக்கு தமிழகத்திலும் சம்பளம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை அரசு விரைந்து நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு பேசினார். 1.கமல் தமிழ் அடிப்படைகளுக்கு நிற்க வேண்டும். 2.புதிய கட்சிகளில் இணைபவர்கள் சொந்த முன்னேற்றத்திற்கு இந்தக் கட்சி சரிவரும் என்று இணைந்து கட்சியை அந்தக் கோணத்தில் நகர்த்துவார்கள். அல்லது இது வரை நமது கனவாகிப் போய் விட்ட நமது ஆதங்கங்களைப் பதிவு செய்வதற்கான அருமையான தலைமை. இதை முடிந்த வரை வலுப்படுத்துவோம். என்று இணைந்து கட்சியை அந்தக் கோணத்தில் நகர்த்துவார்கள். கமல் கட்சியில் இணைந்து கொண்டிருப்பவர்கள் எந்தக் கோணத்தில் கட்சியில் இணைகிறார்கள் என்பதைப் பொறுத்தே கட்சியின் வெற்றியோ, தமிழ் மக்களின் வெற்றியோ தீர்மானிக்கப் படும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,768.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



