12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கிய பிறகு கட்சியை எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் தற்போது வரை அ.தி.மு.க அரசுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அ.தி.மு.க கட்சி என்று பார்த்தால் ஜெயலலிதா இருந்த போது இருந்த சூழல் தற்போது இல்லை. ஆட்சி வலுவாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்து வருவது மூத்த நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது. இராகிநகர் இடைத் தேர்தலில் அடைந்த தோல்வி அ.தி.மு.கவின் பலவீனமான நிலையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் தான் அ.தி.மு.கவின் செயற்குழு கடந்த கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய பலரும் அதிமுக பலவீனமாகி வருவதை கூறியே வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு எல்லாம் உச்சமாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்று வரும் போது மக்கள் செல்வாக்கில், மூன்றாம் நிலையில் உள்ள கட்சிகள் கூட அதிமுகவை விரும்பவில்லை. பழம்பெறும் கட்சியான காங்கிரஸ் தொடங்கி, மழைக்கால காளான்களாய் முளைத்த கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராக இல்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி பல்வேறு நிர்வாகிகளின் செயற்குழு பேச்சில் வெளிப்பட்டது. அதே சமயம் தினகரன் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. என்ன தான் தினகரன் காசு கொடுத்து கட்சிக்கு ஆள் கூட்டி வருவதாக சொன்னாலும் கூட அ.தி.மு.க தொண்டர்களில் ஒரு தரப்பினருக்கு தினகரன் மீது நம்பிக்கை இருக்கிறது. மேலும் கூட்டணி என்று வரும் போது தினகரனுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நடுவண் ஆட்சியில் இருக்கும் வரை அதிமுக அரசுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் தேர்தலில் அடையாளம் தெரியாமல் போனால், நமது எதிர்காலம் என்னவாகும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே அவர்கள் கடந்த காலத்தை போல ஏதேனும் ஒரு நபரிடம் அடைக்கலமாகி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், காலத்தை ஓட்ட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு பன்னீர் மற்றும் எடப்பாடியைக் காட்டிலும் தினகரன் சரியாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே தினகரனுடன் சமரசமாக சென்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று வட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் பேசத் தொடங்கியுள்ளனர். விரைவில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர்கள் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி எதற்கும் தயாராகத்தான் இருப்பார். மக்கள் செல்வாக்கு மிக்க தினகரன் மீண்டும் எடப்பாடியிடம் எப்படி ஏமாறுவார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



