Show all

மகிழ்ச்சி மற்றும் குளிர்ச்சி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று. மறுபுறம் தொடர்ச்சியான மழை

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும், மறுபுறம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையும் தமிழகத்தை மகிழ்ச்சியிலும் குளிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது. 

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும், மறுபுறம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையும் தமிழகத்தை மகிழ்ச்சியிலும் குளிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது. அதே சமயம் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு அனுமதியை தாமதித்து வரும் ஆளுநர் மீதான கோபம் குறைய வாய்ப்பில்லாமல் தகித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,869 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4019 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. கடந்த ஒரிரு நாளாக கொரோனா பாதிப்பு 3000-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரேனாhவிலிருந்து தமிழகத்தில் மொத்தமாக 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்னொரு பக்கம்:- மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழை என்ற செய்தியால் அந்தந்த மாவட்ட மக்களும், உழவர் பெருமக்களும் மனம் குளிர்ந்து போய் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்: திருத்தணி (திருவள்ளூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 5 செ.மீ., பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), திருப்பெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 4 செ.மீ., அரக்கோணம் (இராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாலங்காடு (திருவள்ளூர்), ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ.

திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2 செ.மீ.

வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு புதுவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரம் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்: வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்து வரும் மூன்று நாட்களில் தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் நடுக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.