தொடங்கியாச்சு இரஜினி கட்சி. கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சியாம். 30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை 16,மார்கழி (டிசம்பர்31) அன்று வெளியிடவுள்ளார் இரஜினி. தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் இரஜினிகாந்த், கட்சி அறிவிப்புப் பணிகளுக்காக 14,மார்கழி (டிசம்பர்29) அன்று சென்னை திரும்புகிறார். தான் தொடங்கவுள்ள புதிய கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், நியமனம் செய்துள்ளார் இரஜினிகாந்த். அவர்கள் இருவருமே கட்சிப் பணிகளை மும்முரமாகக் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில், இரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் ‘மக்கள் சேவைக் கட்சி’ எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்சிக்கு தானி (ஆட்டோ) சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் நேற்று தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட கரும்புஉழவன் சின்னமே இந்த முறையும் கிடைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்று ஆண்டுகளுக்கு முன்பே கட்சி, கட்சியின் பெயர் ஆகியவற்றைப் பதிவு செய்தார் இரஜினிகாந்த். அப்போது பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’. செயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்று வந்த ஆட்சி கலைந்தால், உடனே கட்சி தொடங்கி, தேர்தலைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தினார் இரஜினி. ஆனால், இரஜினி நினைத்தது நடக்கவில்லை. அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சிப் பூசல், ஒன்றிய பாஜகவின் துணையோடு எடப்பாடி, பன்னீருக்கு சாதகமாக முறியடிக்கப்பட்டு, தற்போது வரை ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்பதை முடிவு செய்துவிட்டார் இரஜினி. முன்னதாக, தனது முதல் தேர்தல் களம் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் இரஜினி எப்போதோ முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ என்ற பெயரை சில மாதங்களுக்கு முன்பு தான் ‘மக்கள் சேவைக் கட்சி’ என மாற்றியுள்ளனர். அதற்கான காரணம் என்னவென்றால், அண்மையில் வெளியான ஒரு படத்தில், ‘மக்கள் சக்தி கழகம்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி இடம்பெற்றுள்ளதாம். இதனாலேயே இந்தப் பெயரை மாற்றியுள்ளனர். தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கையில் ‘பாபா முத்திரை’ சின்னமிருந்தால் ஒதுக்குமாறும், அது இல்லை என்றால் தானி (ஆட்டோ) சின்னத்தை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில் இரஜினிகாந்த் பெயர் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான சின்னங்கள் ஒதுக்கீடு பட்டியலில், மக்கள் சேவைக் கட்சிக்காக தானி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இரஜினி கொண்டாடிகள் தானி சின்னத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், இரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் முதன்மையான படம் பாட்சா. அதில் தானிக்காரனாக நடித்திருந்தார் இரஜினி. இதனால், கண்டிப்பாக நமக்கு வெற்றிதான் என்று உற்சாகமடைந்துள்ளனர் இரஜினி கொண்டாடிகள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



