திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 18,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக ஆட்சி முன்னெடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் சரக்குசேவை வரி நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் முடக்கநிலையில் உள்ளன. இது போதாவென்று கொரோனாவிற்கு ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் தமிழகத்தின் தொழில் வணிகத்தை மேலும் பாதித்திருக்கின்றன. இந்த நிலையில் கல்விக் கடன் வாங்கி படிப்பை முடித்த பெரும்பாலான மாணவர்கள் படிப்புக்கு வேலை கிடைக்காமலும், தொழில் தொடங்குவதற்குப் பொருளாதார நிலை இடம் தராத நிலையிலும் கல்விக் கடனை திரும்ப அடைப்பதற்கு வழி இல்லாமல், வங்கிகளின் நெருக்கடிகளுக்கு நொந்து வருகின்றனர். இந்த நேரத்தில் திமுக அவர்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த வகையான மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின், என்ற நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கு பெறப்படும் மனுக்கள் திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். முதியோர் உதவித்தொகை ஆதவற்றோர் விதவை மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் கல்விக்கடன் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த கடன்களைத்; தள்ளுபடி செய்வதால் அரசு கடனில் மூழ்கி விடும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தத்தான் இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏழைகள் துன்பத்தில் இருந்து மீள்வதில் அரசு நிமிரும் என்ற அனுபவம் திமுகவிற்கு நிறையவே உண்டு என்று உறுதி தெரிவித்தார் ஸ்டாலின்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.