Show all

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கெடு

அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் பதிகை செய்த மனு:

அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்து வந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக அதிமுக அணிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிகை செய்யப்பட்டுள்ளன. தற்போது அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்த முறையைப் பின்பற்றி அதிமுகவிலும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும்.

தேர்தலில் சின்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காக சின்னத்தையே நம்பியுள்ளன. மக்கள் மத்தியில் கட்சி சின்னம் ஆழமாக பதிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் மிகவும் பிரபலமானது.

இரட்டை இலை சின்னத்தால் தமிழக ஆட்சியிலும், நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சியாகவும் தற்போது அதிமுக உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது போகூழ்வசமானது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு 5 மாதம் ஆகிறது.

புதிய பொதுச்செயலர் தேர்வு, உள்ளாட்சி தேர்தல், ஆர்கே நகர் இடைத் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டியதுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் கட்சியின் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொண்டர்களிடம் தற்போது குழப்பான சூழல் காணப்படுகிறது. இது எதிர்கட்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தேர்தலில் பிரச்சினை எழுந்த போது ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது.

இதைப் பின்பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் அணியிலுள்ள அதிமுகவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக்கூட்டத்தை கூட்டி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி யாருக்கு ஆதரவு என்பதைக் கண்டறிய வேண்டும்.

அதிமுகவில் தலையாய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் என 3100 பேர் உள்ளனர். இவர்களை ஒரே இடத்தில் கூட்டி ஓய்வு பெற்ற உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அதிமுக (அம்மா அணி) சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த வி.கே.சசிகலா, தினகரன் ஆகியோரையும், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், செம்மலை ஆகியோரையும், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அறங்கூற்றவர்கள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்தவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி பதிகை செய்த மனுவை ஏற்ற அறங்கூற்றுவர்கள், மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அடுத்த விசாரணையை செப்டம்பர்13ஆம் தேதிக்கு அறங்கூற்றுவர்கள் ஒத்திவைத்தனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள், இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீது முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் அணிகள் சார்பில் லட்சக்கணக்கில் பிரமாணப்பத்திரங்கள் பதிகை செய்யப்பட்டுள்ளன என்றும் மாறி மாறி சின்னத்தை கேட்பதால் முடிவெடுக்க தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து அறங்கூற்றுவர்கள், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31 க்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.