நடுவண் அமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை கொடுக்கப்பட்டது. முதல் முறையாக தனிப் பொறுப்பாக பெண் ஒருவருக்கு பாதுகாப்புத் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்துக் கொண்டு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறையையும் தம் வசம் வைத்திருந்தார். திடீரென நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டிருப்பது பாஜகவிலேயே பலருக்கும் ஆச்சரியம்தான். இத்தனைக்கும் 2008-ம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியை பெற்றவர் நிர்மலா சீதாராமன். மிக குறுகிய காலத்திலேயே விறுவிறுவென இணை அமைச்சர் பதவி தொடங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் வரை உச்சம் தொட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். இப்போது நிர்மலா சீதாராமனை மிகப் பெரிய திறமையானவர் என காட்டும் வேலைகளும் துரிதகதியில் நடைபெறுகின்றன. பாரதிய ஜனதா கட்சியில் திடீரென ஏற்றம் பெற்றவர்களில் நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர். இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம் திடீரென மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை ஒப்படைத்து அவரை மிகப் பெரிய திறமையானவர் என பாஜக அடையாளப்படுத்த முயற்சிப்பதன் நோக்கம்- நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது எனும் பாஜகவின் பொருள்நிரல்தானாம்! தமிழகத்தில் பாஜக தலைகீழாக நின்று பார்த்தும் காலூன்ற முடியவில்லை. பாஜகவின் தலைவர்கள் அனைவருமே அத்தனை அணிகளாக இருந்து வருகின்றனர். நடுவண் பாஜக அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை தமிழக பாஜக தலைவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால்தான் நெடுவாசல், மீனவர் பிரச்சனைகளில் நிர்மலா சீதாராமனை களமிறக்கியது டெல்லி. நீட் தேர்வு விவகாரத்திலும் நிர்மலா சீதாராமனை பேச வைத்து தமிழர்களை முட்டாளாக்க நினைத்திருந்தது பாஜக. அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொள்ள இப்போது தமிழகம் கோபத்தின் உச்சியில் இருந்து வருகிறது. இருந்தபோதும் தேர்தல் களத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்ற கணக்கில்தான் நிர்மலா சீதாராமனை மிகப் பெரிய ஆளுமையாக காட்டி தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக களமிறக்குவதில் மும்முரமாக இருக்கிறது பாஜக.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



