Show all

முன்னெடுக்கப்பட்டது- முன்பு திருமணம், நேற்று வளைகாப்பு! வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற தமிழ்ப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியத் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற தமிழ்ப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  

நடுவண் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இரண்டு கிழமைகளுக்கு முன்பு போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை அடுத்து இப்போராட்டம் தொடர் போராட்டமாக மாறியது.

உலகினரில் எப்போதும் மொழி அடையாளத்தையே முதன்மைப்படுத்தும் மரபினரான தமிழர்கள்- பல்லாயிரம் ஆண்டுகளாக மொழிக்கு இலக்கணம் (காப்பியம்) போல, வாழ்க்கைக்கும் காப்பியத்தை- (இலக்கணம்) வாழ்ந்த அனுபவங்களில்  இருந்து கட்டமைத்து அந்த அடிப்படையில் வாழும் மரபினர் ஆவர்.

தமிழகத்தில்- கிறித்துவம், இஸ்லாமியம், ஹிந்துத்துவம் என எந்த மதமும் தனியாகவோ, குடும்பமாகவோ சிலபல தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதங்களே. எந்த அடிப்படையிலும் மனிதனிடம் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் பாகுபாடு கற்பிப்பது தமிழர்தம் காப்பிய நெறியன்று.

இந்த நிலையில் தமிழகத்தில் எந்த மதத்தை முன்னெடுக்கிறவர்களும் அடிப்படையில் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளாகக் கருதியே  தமிழர்கள் பழகுவார்கள்.  

இந்த அடிப்படையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியத் தமிழர்களுக்கு அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நெகிழ்ச்சியான நிகழ்வுகளும்  நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் மேடையில், பாக்கியலட்சுமி என்ற கர்பிணி தமிழ்ப்பெண்ணிற்கு தமிழர் பண்பாட்டின் உயரிய தாய்மை போற்றும் விழாக் கொண்டாட்டமான வளைகாப்பு நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், மஞ்சள்அரிசி தூவியும் வாழ்த்தினர்.

மேலும், வளைகாப்பு விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற முழக்கம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

முன்னதாக இந்தப் போராட்டத்தின் காரணமாக சயின்ஷா, சுமையா மணமக்களுக்கு நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு பின்னர், இங்குள்ள போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் அறிவுறுத்தலின்படி பத்து நாட்களுக்கு முன்னம் அவர்களுக்கு போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் திருமண உறுதிமொழி எடுக்கும் போது- இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.