Show all

தமிழ்நாடு அரசு அறிவிப்பு! கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். 

மதுரை அருகே கீழடி கிராமத்தில் 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை அண்மையில் புத்தகமாகவும், இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையாக படக்கோப்பு பக்கங்களாகவும்  வெளியிட்டுள்ளது. உலக அளவில் பல்லாயிரக்காணக்கானவர்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து படித்து பாராட்டி வருகின்றனர்.

அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை உடையது என்று கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சங்க காலத்திற்கும் முன்னதாகவே தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. 

முதல் மூன்று கட்ட அகழாய்வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால், 4ம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், 'கீழடியில் நடந்த முதல் 3 அகழாய்வு முடிவுகளைப் பெற டெல்லி செல்ல இருக்கிறேன். விரைவில் மூன்று கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படும். கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

அடுத்த கட்ட ஆய்வுகள் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. தொல்லியல் துறையில் தனி தொலைநோக்கு பார்வை குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் 11 தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன” என்று பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,284.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.