04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் அபரிமிதமான மழையால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. குறுகிய கால இடைவெளியில் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பிவிட்டது. உபரி தண்ணீர் மொத்தமும் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி கழிமுக மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. குறிப்பாக, கிளை வாய்க்கால்கள் துர்வாரப்படாததால் வயல்களுக்கு தண்ணீர் சென்று சேர வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முதன்மை ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மராமத்து பணிகள் சரிவர செய்யாததால் கூடுதல் தண்ணீர் திறந்தால் கரைகள் உடைத்துக் கொள்ளும் நிலை உள்ளது. தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறையின் அலட்சியமும், செயல்படாத தன்மையும் இதற்கு காரணமாகும். உபரியாக தண்ணீர் வந்தும் அதை உருப்படியாக பயன்படுத்த முடியாத நிலைமையை உருவாக்கியுள்ள தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவா சத்திரம், பூதலுர், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மன்னார்குடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல், கீழையூர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி ஆகிய பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் சென்று சேரவில்லை. உழவர்கள் பணிகளை தொடக்குவதற்கு நிலங்களை தயார் நிலையில் வைத்திருந்தும், தண்ணீர் வராத காரணத்தால் பல பகுதிகளில் உழவடைப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் வந்தும் அது பாசனத்திற்கு பயன்படாமலும், ஏரி, குளங்களில் நிரப்பப்படாமலும் வீணாகிக் கொண்டிருப்பதற்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணமாகும். எனவே, கிளை வாய்க்கால்கள் அனைத்தும போர்க்கால அடிப்படையில் துர்வாரப்பட வேண்டும். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும், ஏரிகள், குளங்களில் நீர்நிரப்பப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உழவர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,885.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



