Show all

வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கொடுத்தார் கமல்! தமிழக பாஜகவினர் உற்சாகமாகப் பேசித் தள்ளுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துப் பரப்புதலுக்கு செய்தியே இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த தமிழக பாஜகவினருக்கு காந்தியார் கொலை குறித்து பேசி அவல் ஆகிவிட்டார் கமல்காசன். 
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் 
அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கருத்துப் பரப்புதல் செய்தார். 

அப்போது கமல், 'விடுதலை இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன்'' எனப் பேசி இருந்தார். 

காந்தியார் கொலை: நீண்ட நெடுங்காலம் இந்தியாவில் பிரபலங்கள் யாரும் பேசாத செய்தி. சமூக ஊடகங்களில் கமல் பேசியது போல அடிக்கடி பதிவுகள் வெளி வருவது உண்டு. 

கமல் அந்தப் பதிவுகளைப் படித்து தனக்குள் அசை போட்டுக் கொண்டிருக்கக் கூடும். அதை அவர் வெளிப்படையாகப் பேசி விட்டார். தமிழக பாஜகவினருக்கு கடுங்கோபம் வந்து, கமலை நன்றாக மென்று தங்கள் கருத்துப் பரப்புதலை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்கள். 

பெரியார் ஹிந்து மதம் குறித்து நிறைய பேசுவார். ஹிந்து மதத்தை வைத்து செய்வார். அவர் என்னவெல்லாம் பேசினார். ஏன்னவெல்லாம் செய்தார் என்பவைகளைக் கூட நம்மால் தற்போது பேசி விட முடியாது. 

பாரதிதாசன் அவர்கள் தமிழ்இயக்கம் குறித்து நிறைய பேசுவார்: 

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உலகாள உமது தாய் மிக உயிர்வாதை அடைகிறாள்;
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படை சேர்;
கடுவிட நேர் கருவிகள் சேர்!
நிலமே உழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே
உனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் சனநாயகம்
எனவே முரசறைவாய்! இலையே உனவிலையே
கதிஇலையே எனும் எளிமை இனி மேலிலை
எனவே முரசறைவாய்... முரசறைவாய்! 
என்று கவிதையால் தமிழர்களைத் தட்டி எழுப்புவார்.

ஒட்டு மொத்த இந்தியாவே அவர்களைக் கண்டு அஞ்சும். அவர்களுக்கு பாதுகாப்பாக, அன்று இருந்த, அண்ணா காலத்து திமுக- எவரும் வாய்திறந்தால் பொசுக்கும் நெருப்பாய் சுழன்றடிக்கும். திமுக கூட்டம் என்றால் மக்கள் இரவு பகல் பாராது அலையலையாய் திரள்வார்கள். 

இன்றைக்குத் தமிழகம் இருக்கிற நிலையில்- பாவம் கமல்! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,151.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.