29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ? பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், அமாவாசை நேரத்தில் கொடி ஏற்றியுள்ளார் போலி பகுத்தறிவுவாதம் என்று தமிழிசை சொல்கிறாரே. (!) அவர் சொன்னது சரியாக இருக்கலாம், என்னைப் போலி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்று தெரியவில்லை. நான் பகுத்தறிவாளன். ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் உள்ளவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. என் வீட்டில் உள்ள என் மகளே கூட அப்படி இருப்பார் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. நான் இங்கு வந்து இருப்பது பகுத்தறிவு கொள்கையைப் பரப்பி, மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக என்றால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் இங்கு வந்திருப்பது, ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு அனைவர் உதவியும் தேவைப்படுகிறது. ஒருவேளை தமிழிசை சொல்வது உண்மையாக இருக்கலாம், தேதி பற்றி எனக்கு தெரியாது. ? பகுத்தறிவாளர் பிம்பம் உங்களுக்கு இருக்கும்போது ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று அழைக்கிறார்கள். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே. (!) சர்ச்சை தான், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது பழைய கூக்குரல். அப்படிக் கூப்பிடக் கூடாது தான். அதுபற்றி வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று எனது கட்சிக்காரர்கள் இனி யாரும் கூறாதபடி பார்த்துக்கொள்கிறேன். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன். ஆனால் நிகழ்ந்ததற்கு நான் பொறுப்பல்ல. கட்சியில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கவும் தயங்க மாட்டேன். சத்துணவு முட்டை ஊழல் விவகாரத்தில் ஒரு வருடம் முன்பே நாங்கள் எங்கள் வலைதளத்தில் குறிப்பிட்டுச் சொன்னோம், ஆனால் அப்போது அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, எங்கே நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று மார் தட்டியவர்கள் தான் மீண்டும் அதில் சிக்கியுள்ளார்கள். மீண்டும் அதைச் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முதன்மையான கடமையாக உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



