புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிரான சூர்யா கருத்துக்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா நடுவண் அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசினார். அதில், அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்? என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் கண்டித்திருந்தார். சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் வழியாக ஏராளமான கருத்துப் படங்களும், கருத்துக்களும் பதிவிடப் பட்டு வருகின்றன. எதிராக, தமிழக பாஜகவினர் சிலரும், அதிமுகவினர் சிலரும் பேசி வருகின்றனர். இந்தநிலையில் கமல்ஹாசன் கீச்சுவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது, கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,216.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



