17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விமான நிலையத்தில் இதழியலாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை இதழியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேசி, 'அப்புறம் எதற்கு இங்கு வந்தார்? அதுவும் ஸ்டெர்லைட் உரிமையாளரைச் சந்தித்து விட்டு' என்று கேள்வி எழுப்புதற்கு காரணமாகிப் போனார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார் ரஜினிகாந்த். செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விக் கணைகளை தொடுக்கவே கடும் கோபமடைந்த ரஜினிகாந்த், ஏவ் என ஒருமையில் கத்தியபடி, வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா? என செய்தியாளர்களை மிரட்டிவிட்டு செய்தியாளர்சந்திப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு வேகமாக சென்றார். இதழியலாளர்களை மிரட்டும் தொனியில் ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை ரஜினி மிரட்டும் வகையில் ஒருமையில் பேசியதற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை இதழியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த ரஜினிகாந்த், ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார். அவருடைய நடவடிக்கைக்கு சென்னைப் இதழியலாளர்; சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி. இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினி காந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னைப் இதழியலாளர்; சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



