27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆகிய முதன்மைக் கட்சிகள் ஆறு முனைகளாகத் தேர்தலை சந்திக்கின்றன. அமமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 38 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்களே களமிறங்க உள்ளனர். வேட்பாளர்கள் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்தவுடன், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட தினகரன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கை கேட்டிருந்தனர். அவர்களில் ஒருசிலருக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டு, நாடாளுமன்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறதாம். தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப் பிரசாரத்தை மக்கள் சந்திப்பு பயணம் மூலமாகத் தினகரன் ஏற்கெனவே முடித்துவிட்டார். முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, அடுத்தகட்ட பயணத்துக்கு தினகரன் புலிப் பாய்ச்சல் காட்டப்போவதாக அமமுகவினர் குதூகலிக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.