07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஊடகங்களையோ, அரசையோ நம்பி வந்த தமிழக பொது மக்கள், தற்போது அரசின் மீதும், ஊடகங்களின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களாகவே, சமூக வலைதளங்கள் ஒத்துழைப்போடு மனம் புழுங்குகிறவர்கள் ஊடகமாகவும், கொஞ்சம் துணிச்சல் இருப்பவர்கள் போராளியாகவும் செயலாற்றத் தொடங்கி விட்டார்கள். அரசோ அவர்களை ஆற்றுப்படுத்த முயலாமல், அப்புறப் படுத்தும் முயற்சியில், கைது நடவடிக்கைகளையும், பச்சைப் படுகொலை முயற்சிகளையும கையில் எடுத்திருக்கிறது. சில பல ஊடகங்கள் மனம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசோ அவல நிலையில்தான் இருக்கிறது. அதனால் இதோ ஒரு போராளிப்பெண் தன்னந்தனியாக களம் இறங்கியிருக்கிறார். சென்னை அண்ணா நகரில் வசித்து வரும், விருதுநகரை சேர்ந்த நர்மதா நந்தகுமார் அகவை 45 நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றுக்கு நேற்று நர்மதா வந்தார். அங்கு மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பள்ளங்களை திடீரென தோண்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாத்தல், தூர் வாருதல் மற்றும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காக தனி நபராக போராடி வருகிறேன். அமைச்சர் வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாலாற்றில் மணல் திருட்டு நடத்தி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் இங்கு வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டேன். மணல் கொள்ளையை உடனடியாக நிறுத்தாவிட்டால், கொள்ளையர்களை இந்தக் குழியில் போட்டு புதைப்பேன். அதற்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே இங்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். தகவலறிந்த காவல் ஆய்வாளர் உம்ராபாத் பாலசுப்பிரமணி, துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் அங்கு வந்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



