07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் என்னென்ன தீர்ப்பு வரலாம், எப்படியெப்படி தீர்ப்பு வந்தால் என்னனென்ன பொருள் என்று அனைத்து ஊடகங்களும் மிகத் தெளிவாக கருத்து வெளியிட்டிருந்தன. இரண்டு வகையான தீர்ப்புகள் ஐயப்பாடு கொள்ள முடியாதவை. அவை 1. சட்டப் பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும், 2. சட்டப் பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற இரண்டு தீர்ப்புகளாலும் அதிமுக பதவி இழக்கும். அதிமுக பதவி இழப்பை தள்ளிப் போடுகிற மூன்றாவது தீர்ப்பு இரண்டு அறங்கூற்றுவர்கள் இரண்டு வகையான தீர்ப்பு வழங்கி காலந்தாழ்த்துவது என்பதாகும். என்று கருத்து வெளியிட்டிருந்தன. பொதுவாகவே அவ்வாறே மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்தன. அந்த மாறுபட்ட மூன்றாவது வகையான தீர்ப்புதான் சட்டப் பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் வழக்கில் வந்தது. தீர்ப்புக்கு பின்னாலும் தங்கள் கணிப்பு சரியாக விட்டதாக எல்லா ஊடகங்களும் மகிழத்தான் செய்தன. பல அறங்கூற்றுத் துறையினரின் ஆலோசனையின் பேரில்தான் ஊடகங்கள் தீர்ப்புக்கு முன்பும் பின்பும் கருத்து தெரிவித்தன. முன்பெல்லாம் அறங்கூற்றுத்துறை குறித்து சிறிய குறை கூட வெளியில் வராது. தற்பொழுதெல்லாம் தாராளமாக அனைவரும் விமர்சிக்கிறார்கள். இவ்வாறான நிலையில், அறங்கூற்றுத்துறையைச் சேர்ந்தவர்களே, அறங்கூற்றுவர்களை விமர்சிப்பது என்பது அறங்கூற்றுத்துறையை தற்கொலைக்குத் தூண்டுவதற்குச் சமம் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். தங்க தமிழ்செல்வன் மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜிக்கு வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவரது கடிதத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான தங்க தமிழ்செல்வன் தங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதியை விமர்சித்து பல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் கருத்தை முன்வைத்து வருகிறார். சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் அறங்கூற்றுவர்கள் மேல் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதனால் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறப் போவதாகவும் தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க போகின்ற மூன்றாவது நீதிபதி தனக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதற்கு மாநில அரசால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார். சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், அதன் அறங்கூற்றுவர்கள், தலைமை அறங்கூற்றுவர் என அனைவருக்கு எதிராகவும், அவர்களின் நேர்மையையும், ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் குலைக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளார். இதை நீதித்துறை மீதான உச்சபட்ச தாக்குதலாகக் கருதவேண்டும். இந்த வழக்கை விசாரிக்கப் போகின்ற மூன்றாவது அறங்கூற்றுவர் எஸ்.விமலா இந்த வழக்கில் விசாரித்து தீர்ப்பளிப்பதிலிருந்து பின் வாங்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் விருப்பப்படுகிறார். அறங்கூற்றுத்துறை குறித்து தவறாக சித்தரித்து அறங்கூற்றுத்துறையை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தங்க தமிழ்செல்வன் மீது சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தானாக முன்வந்து அறங்கூற்றுமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேச்சு தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறேன் என கடிதத்தில் தெரிவித்திருக்கிறாராம். இந்தக் கடிதம் குறித்து, அறங்கூற்றுவர் என்.கிருபாகரன் முன்னிலையில் அணியமாகி முறையிட்டார். இதனை தலைமை அறங்கூற்றுவர் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அறங்கூற்றுவர் கிருபாகரன் தெரிவித்தார். மேலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அறங்கூற்றுத்துறை சார்ந்த வழக்கறிஞர்களே தீர்ப்பு குறித்தும், அறங்கூற்றுவர்கள் குறித்தும் விமர்சிப்பதைத் தடுக்காவிட்டால் அறங்கூற்றுத்துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும் என அறங்கூற்றுவர் கிருபாகரன் வேதனை தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



