தேச துரோக வழக்கில்
தண்டனை கிடைத்தால் அதனை ஏற்று சிறை செல்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எதையும் மறுக்க மாட்டேன், பிணையிலும் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் கடந்த 2ம் தேதி கைது
செய்யப்பட்ட வைகோ 15நாள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று
ஆஜரானார். அவரை மீண்டும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற
நீதிஅரசர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன்
என்ற புத்தகத்தை வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக
வைகோ மீது அப்போதய திமுக அரசு தேச விரோத வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில்
நிலுவையில் இருந்து வருகிறது. இந்தேய இறையாண்மைக்கு
எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 3ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ
நேரில் அணியமானார். அப்போது அவர் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்
அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார். வைகோவை பிணையில் செல்லும்படி நீதிமன்றம் கேட்டுக்
கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில்
வைக்க நீதிஅரசர் கோபிநாத் உத்தரவிட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, 15 நாட்கள்
நீதிமன்ற காவலுக்குப் பின்னர் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில்
அணியப்படுத்தப்பட்டார். அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு
நீதிமன்றத்திற்கு தான் உள்ளது அதனால், இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்திற்கு
மாற்றி, எழும்பூர் நீதிமன்ற நீதிஅரசர் உத்தரவிட்டார். மேலும், வைகோவை வருகிற 27ந் தேதி
வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த ஆட்சியில் பங்கு பெற்றிருந்த
தி.மு.க. தமிழகத்தை ஆண்டது. இந்த இரு கட்சிகளும், லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக்
கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதை மக்களுக்கு நினைவுப்படுத்தியதால் இந்த வழக்கில்
நான் சிறை சென்றேன் என்றார். இந்தத் தேச விரோத வழக்கில் என் மீது கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளை நான் மறுக்க மாட்டேன். நான் என்ன பேசினேனோ அதை அப்படியே ஒப்புக்கொள்வேன்.
இதனால் எனக்கு இந்த தேச துரோக வழக்கில் சிறை தண்டனை கிடைத்தாலும், அதை தயங்காமல் ஏற்பேன்.
இதை நான் எதையும் மறுக்கப் போவதில்லை என்று கூறிய அவர் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்
என்றார். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
போராடி வருவதாக கூறினார். அவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி
எழுப்பினார். மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக
செயல்படுகிறதா என்று கேட்டார். மேலும் பேசிய அவர், தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு
அளித்துள்ள நிவாரண நிதி யானைப்பசிக்கு சோளப்பொறி என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பிரச்சினைக்காக
தி.மு.க. அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, வருகிற 25ந் தேதி முழு கடையடைப்பு போராட்டத்தில்
ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளது. ம.தி.மு.க.வை பொருத்தவரை இந்த போராட்டத்துக்கு
ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. நடுநிலை வகிக்கின்றோம் என்று கூறினார். நீதிமன்ற
உத்தரவின் பேரில் வைகோ மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



