26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வின் தமிழ் வடிவ வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு பதிகை செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீட் தேர்வை நடத்திய, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு எதிராக பல்வேறு கேள்விகளை அறங்கூற்றுவர்கள் எழுப்பினர். இந்நிலையில் இன்று உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை அறங்கூற்றுவர்கள் செல்வம், பசீர் அகமது கொண்ட அமர்வு இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கினர். அதில் பிழையான 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்களை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் வழங்க வேண்டும் என அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த 2 கிழமைக்குள் மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக புதிய தர வரிசைப் பட்டியலை தயாரித்து வெளியிடவும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திற்;கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து, பாமக நிறுவனர் தனது கீச்சுப் பக்கத்தில் கருணை மதிப்பெண் வழங்க உயர்அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து நடுவண், மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக் கூடாது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூக நியாயத்;தை உறுதி செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது கீச்சுப் பதிவில் வலியுறுத்தியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,844.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



