30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணாவின் மறைவின் போது திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலி மிகவும் போற்றிக் கொள்ளப்பட்டது. இந்தக் கவிதாஞ்சலி, அண்ணாவின் பிறந்தநாளான இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலிபரப்பப்பட்டது. அண்ணா மறைந்தபோது சென்னை வானொலியில் இந்த கவிதாஞ்சலியை கருணாநிதி வாசித்திருந்தார். 'பூவிதழின் மென்மையிலும் மென்மையான' எனத் தொடங்கும் அந்தக் கவிதை இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலிபரப்பப்பட்டது. இதனை நினைவிடத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டு ரசித்தனர். மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் பிரம்மாண்டமான மைக் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் கவிதாஞ்சலியில், 'அண்ணா, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாய். இதயம் தாங்க எமக்கு ஏதண்ணா இதயம்? கடற்கரையில் காற்று வாங்கியது போதும் அண்ணா, எழுந்து வா எம் அண்ணா, எழமாட்டாய், வர மாட்டாய், இயற்கையின் சதி எமக்கு தெரியும். அண்ணா, நீ இருக்கும் இடம் தேடி யான் வரும் வரை இரவலாக உன் இதயத்தைத் தந்திடு அண்ணா. நான் வரும்போது அதனை கையோடு கொண்டு வந்து உன் காலடியில் வைப்பேன் அண்ணா' என கருணாநிதி கேட்போர் கண்ணை குளமாக்க எழுதியிருப்பார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



