ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த 7 பேர்கள் தீக்குளிக்க முயன்றனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனை கண்டித்து என கூறப்படுகிறது. 29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொங்குகாட்டூர் கன்னாங்கரடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவராஜ் அகவை 58, அர்ச்சுனன் அகவை 55, இவர்களது அக்கா சம்பூர்ணம் அகவை 60, இவர்கள் அதே பகுதியில் உள்ள 2.41 ஏக்கர் நிலத்தில் வேளாண் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலத்தையொட்டி அரசுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து, 200 தென்னை மரங்கள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிவராஜ் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த புறம்போக்கு நிலத்தை குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்தியது. இதுகுறித்து சிவராஜ் குடும்பத்தினர் முறையிட்டபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தீர்கள். தற்போது, வீடுகள் கட்ட தென்னை மரங்களை அகற்ற வேண்டி உள்ளது. வேண்டுமென்றால், உங்கள் நிலத்தில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைத்து தருகிறோம் என அமைச்சர் கருப்பணனும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது சிவராஜ், அவரது மனைவி வள்ளியம்மாள், மகள் உமாதேவி, அர்ச்சுனன், மனைவி நீலாம்பாள், மகள் சுகன்யா, சம்பூர்ணம் ஆகியோர், மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த காவல் துறையினர் ஓடிவந்து தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர், 7 பேரையும் சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து சிவராஜ் குடும்பத்தினர் கூறுகையில், எங்கள் பயன்பாட்டில் இருந்த நிலத்தை குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்தும்போது, அதற்கு மாற்றாக எங்களுடைய நிலத்தில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி கட்டி தருவதாக அமைச்சர் கருப்பணன், அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதன்பின் கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்து தீக்குளிக்க முயன்றோம் என்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.