08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மாவட்டம் திருநகர் முல்லைநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 'ஊர்வனம்' என்ற அமைப்பின் தன்னார்வ இளைஞர்கள் பாம்பை மீட்டு, வனத்துறை உதவியோடு நாகமலை அடிவாரத்துக்கு கொண்டு போய்விட்டனர். ஆனால், பாம்பு ஊர்ந்து செல்லாமல் வலியால் அந்த இடத்திலேயே சுருண்டு கிடந்தது. உயிருக்குப் போராடிய அந்தப் பாம்பை மீட்டு, மதுரை தல்லாகுளத்திலுள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் அந்த பாம்புக்கு ஊடுகதிர் படம் எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் அந்த பாம்பின் முதுகு தண்டுவடப் பகுதியில் பலத்த அடிபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்தப் பாம்புக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதற்கான சிகிச்சை வசதிகள் மதுரையில் இல்லை. அதனால், பாம்புகளுக்கான முதுகுதண்டுவட சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் அசோகனிடம் கொண்டு செல்ல, மதுரை கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில், மதுரையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அந்தப் பாம்பை ஊர்வனம் அமைப்பு இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு அதற்கான சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால், கடைசியாக பாம்பை அந்த இளைஞர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் அசோகன், மருத்துவர் அமர்நாத் மற்றும் அவரது குழுவினர் அடிபட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு அறுவைச் சிகிச்சை செய்தனர். தற்போது, அந்தப் பாம்பு நலமுடன் இருப்பதாக மதுரை திருநகர் ஊர்வனம் அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஊர்வனம் அமைப்பு நிர்வாகி விஸ்வநாத் கூறியதாவது: கடந்த ஞாயிறன்று காலை சத்தியமங்கலத்துக்கு இந்தப் பாம்பை கொண்டு செல்லும்போது மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. அதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான போதுமான வசதிகள் சேலத்தில் உள்ள மருத்துவர் அமர்நாத்தின் கால்நடை மருத்துவமனையில் இருப்பதை அறிந்தோம். அதனால், சத்தியமங்கலத்தில் இருந்து சேலத்துக்குக் கொண்டு சென்றோம். ஞாயிறன்று பிற்பகல் 2 மணியளவில் பாம்புக்கு மூக்கு வழியாக மயக்கமருந்து செலுத்தப்பட்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை தொடங்கினர். மாலை 6 மணியளவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனாலும், பாம்புக்கு அடிபட்டு 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட படியால், போதுமான உணவின்றி மிகவும் சோர்வுற்றிருந்தது. தற்போது அந்த பாம்பு சேலம் மருத்துவமனையில் நலமாக உள்ளது. ஆனால், 90 விழுக்காடு பிழைத்துள்ளது. 3 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பிறகு வனத்துக்குள் கொண்டுபோய் விட்டு விடுவோம். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவர் அசோகன் கூறியதாவது: அந்தப் பாம்பின் சதை அழுகி விட்டது. தற்போது அதன் முதுகு தண்டுவடத்தில் எலும்பு மட்டுமே உள்ளது. அதுவும் சேதமடைந்ததால் அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். முதுகு தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்தால் மனிதர்களுக்கு எப்படி ஓய்வு தேவையோ அதுபோல பாம்புக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. அதனால், மயக்க ஊசி போட்டு வைத்துள்ளோம் என்றார். மனிதன் வாழ உயிரினங்கள் கட்டாயம். கண்ணாடி விரியன் போன்ற அனைத்து பாம்பு வகைகளும் தற்போது தொடர் அழிவைச் சந்தித்து வருகின்றன. கண்ணாடி விரியன் பாம்பின் நஞ்சானது, ரத்தத்தை சிதைக்கும் தன்மையுடையது. இந்தியாவில் பாம்புக் கடியினால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில் கண்ணாடிவிரியன் முதன்மையானது. பாம்புகள் குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. பாம்புகளைக் கொல்வதோ, அடித்து துன்புறுத்துவதோ மிகவும் தவறு. பாம்புகள் வீட்டுக்குள்ளோ, சாலைக்கோ வந்துவிட்டால் வனத்துறை அல்லது மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் அதனை உரியமுறையில் காப்பாற்றி, கொண்டு சென்று விடுவார்கள். மனிதன் வாழ்வதற்கு பாம்புகள் போன்ற பிற உயிரினங்கள் உயிரும் மிக முக்கியம். இந்த பாம்பு இனம் அழிந்தால் நாட்டில் எலிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விடும். இதனால் உழவர்களுக்கு அதிக இழப்புகள் ஏற்படும். என்றார். அதுதான் நம்ம மோடி, எதுக்கப்பா மனித நேயம் உயிர் நேயம் எல்லாம்? உழவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். மீத்தேன், நியுட்ரினோ என்று கொஞ்சமா மனிதர்களை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் வாழ்க்கை முறைக்குச் செல்லலாம் என்கிறாரோ? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



