06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கேரளாவில் பரவி வரும் நிப்பா எனப் பெயரிடப் பட்டுள்ள நோய் பரப்பும் நுண்ணுயிரிகளால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிப்பா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகும். இதன் பிறப்பிடம் பழந்தின்னி வெளவால்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் மலேசியாவில் இந்த நுண்ணுயிரியால் நோய் தொற்று ஏற்பட்டது. வெளவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது. பதினான்குஆண்டுகளுக்கு முன்பு வங்க தேசத்தில் பழந்தின்னி வெளவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிப்பா தொற்று பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவப்படுவதும் கண்டறியப்பட்டது. நிப்பா நுண்ணுயிரியால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆசியாவில் சில விலங்குகள் மூலம் பரவும் நிப்பா தொற்று எந்த அகவை உடையவர்களையும் தாக்கும். அதன் அறிகுறிகள்: கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி, அயர்வு, சுவாசப் பிரச்சனைகள், மனக்குழப்பம் நிப்பா நுண்ணுயிரி தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும். நிப்பா நுண்ணுயிரி தாக்குதலுக்கு என குறிப்பாக சிகிச்சை ஏதும் இல்லை. கோழிக்கோடில் அதிகளவில் இந்த தொற்று பரவி வந்தாலும், கேரளா முழுவதும் இதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



