18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இராசராசசோழன்;, அவரது மனைவி லோகமாதேவியார் உள்பட ஏராளமான பல கோடி மதிப்புள்ள தங்கம், ஐம்பொன் மற்றும் உலோகத்தாலான சிலைகள் மாயமாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள கட்டடக் கலைச் சிறப்பு பெற்ற மற்றும் தொன்மை வாய்ந்த கோயில்களில் கடந்த சில ஆண்டுகளாக ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக கழிமுக மாவட்டங்களில் உள்ள சோழர் கால கோயில்களில் கொள்ளை அதிகளவில் நடந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் சிலை கொள்ளை வழக்கை விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அனைத்து சிலை வழக்குகளையும் காவல்துறை தலைவர் பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக திருச்சியில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவிற்கு அலுவலகம் மற்றும் தேவையான அளவில் காவலர்கள் கொடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி ஆயுதப்படையில் உள்ள அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை தலைவர் அலுவலக முகாம் துவங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர். இவர்களுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாயமான சிலைகள் குறித்த புகாரை கொண்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி குடந்தை அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 6 சிலைகள் திருடப்பட்டதும், கோயில் இணை ஆணையர், முன்னாள் செயல் அலுவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சி அருகே ஜீயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாருகானேஸ்வரர் கோயிலில் போககத்திஅம்மன் உள்பட 3 சிலைகளை திருடி விட்டு போலி சிலைகளை செய்து வைத்தது தெரியவந்தது. இந்த வழக்கில் கோயில் நிர்வாக அலுவலர் ஆனந்தராவ் தலைமறைவாக உள்ளார். இவரின் முன்பிணை உயர்அறங்கூற்று மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இராசராசசோழன்;, இவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு கமுக்கத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள் கமுக்கமாக கோயிலில் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் கோயிலில் இருந்த உலோக திருமேனியாக செய்து கொடுத்த இராசராசசோழன், இவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (995) இராசராசசோழனால் நியமிக்கப்பட்ட காரியங்காரரான கொடும்பாளுர் தென்னவன் மூவேந்த வேளாண் மறவர் தஞ்சை பெரிய கோயிலுக்கு மொத்தம் 13 பஞ்சலோக தெய்வ திருமேனிகளை செய்து கொடுத்துள்ளார். அவற்றில் மன்னர் ராஜராஜசோழன், இவரது மனைவி லோகமாதேவியார் சிலைகளும் தங்கத்தால் ஆன கொள்கை தேவர் சிலை, இராசராசசோழனால் வழங்கப்பட்ட தங்கத்தால் ஆன சேத்திரபாலர் சிலை, இராசராசசோழனின் படைதளபதியாக இருந்த கிருஷ்ணன்ராமன் அளித்த அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலை, குந்தவை பிராட்டியாரால் வழங்கப்பட்ட தாய் வானவன் மகாதேவி, தந்தை பொன்மாளிகை துஞ்சினதேவர் ஆகிய சிலைகளும் மாயமாகி உள்ளன. திருடப்பட்ட சிலைகளில் லோகமாதேவியார் சிலை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதும் தெரியவந்தது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். ஒவ்வெரு தமிழனுக்குமான தலைகுனிவு இது. தமிழர் பண்பாட்டை நிலை நாட்டக் கூடிய தொல்பொருட்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு வெறுமனே அதிகாரிளை நம்பிப் பயனில்லை. நிறைய சமூக ஆர்வலர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



