நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அஞ்சல் வாக்குகளையொட்டி கடந்த காலங்களில் பல சர்ச்சைகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தநிலையில்தான், தேர்தல் ஆணையத்துக்கு அஞ்சல் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பாராளுமன்ற உறுப்பினர் மனு எழுதி அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள மனுவில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் அஞ்சல் வாக்குகளை எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், கையேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த உத்தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக அறிகிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டி, மேலும், 500 அஞ்சல் வாக்குகளுக்கு ஒரு மேசை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில், சிங்காநல்லூர் தொகுதியில் 14 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த சி.பி.எம் வேட்பாளர் சவுந்தரராஜன் அஞ்சல் வாக்குகள் கடைசியாக எண்ணப்பட்டதாகவும் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, மதுரை கிழக்குத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் நன்மாறனிடம் 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த மதிமுகவின் பூமிநாதன் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடிகள் நிகழ்ந்ததாக வழக்கு தொடர்ந்தார். ஆனால், அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை, கடைசியாகத்தான் எண்ணப்பட்டன என தீர்ப்பளிக்கப்பட்டது. அதேபோல கடந்த தேர்தலில், காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனைவிட 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதேபோல, இராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வெற்றிபெற்றார். இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அதில் 203 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 19, 20, 21-ம் சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. இதன்படி எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகளை வெளியிட அறங்கூற்றுமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இப்படி அஞ்சல் வாக்குகள் கடந்த காலங்களில் பல சர்ச்சைகள் நிகழ்ந்திருக்கின்றன. பொதுவாகத் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோற்கும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்த அஞ்சல் வாக்குகள் சீட்டாட்டத்தில் ஜேக்கரைப் பயன்படுத்துவது போல பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தநிலையில்தான், தற்போது தேர்தல் ஆணையத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பாராளுமன்ற உறுப்பினர் மனு அனுப்பியுள்ளார். இது குறித்து, திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டைன் ரவீந்திரன் தெரிவித்ததாவது: பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில், இராதாபுரம் தொகுதி உள்ளிட்ட சில தொகுதிகளில் அஞ்சல் வாக்குகளைவைத்து பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. அதாவது, திமுகவுக்கு விழுந்த வாக்குகள் செல்லாது எனவும், அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் செல்லும் எனவும் அதிகார அடாவடி முன்னெடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, இராதாபுரம் தொகுதியில் அப்பாவுவுக்கு விழுந்த அஞ்சல் வாக்குகளை எண்ணவே இல்லை. ஆனால், அதிமுகவுக்கு விழுந்த வாக்குகளை மட்டும் எண்ணிவிட்டு, அப்பாவுவுக்கு விழுந்த வாக்குகளைச் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். வாக்கு இயந்திரங்களில் எண்ணப்பட்ட வாக்குகளில், அப்பாவுதான் முன்னிலையில் இருந்தார். ஆனால், அஞ்சல் வாக்குகளில் தங்களுக்கு ஏற்றவாறு அதிமுகவினர் தில்லாலங்கடி செய்து வெற்றி பெற்றார்கள். அந்த வழக்கில் தற்போது உயர் அறங்கூற்றுமன்றம் 240 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றிபெற்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இனிமேல் அதைச் சொல்லி எந்தப் பயனும் இல்லையே. ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதானே. அதனால் ஆகப்போகிற பயன் என்ன? எனவேதான் இந்தமுறை முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளைக் கடைசியாகத்தான் எண்ணுவோம் என கட்சி முகவர்களிடம் அதிகாரிகள் சொன்னதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால்தான் தமிழகம் முழுவதும், எது சரியான வழிமுறை என்பதை வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிடுங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறோம். என்று தெரிவிக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.