சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன என்று விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர். 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது. இதுவரை 1082பேரை கொரோனா நுண்ணுயிரி தாக்கி உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 558 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 259 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இராயபுரத்தில் 216 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் சென்னையில் கொரோனா பரவலுக்கான முதன்மையான காரணங்களை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள், டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், திருவிகநகரில் நடந்த பிரார்த்தனைக் கூட்டம், இராயபுரத்தில் உள்ள ஒரு ஊடகத்தினரின் வீட்டில் இருந்து தோன்றியது, கோயம்பேடு சந்தைக்கு வந்தவர்கள் ஆகியோர் மூலம் என சென்னையில் கொரோனா நுண்ணுயிரி பலமுனைத் தாக்குதலாக பரவியதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கூறும்போது, “கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியது எங்களுக்கு சவாலான ஒன்றாகும்” என்றார். அங்கு பல வணிகர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அண்மையில் கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்கள் என பட்டியல் நீளுகிறது. அவர்களை ஒட்டுமொத்தமாக அடையாளம் காண்பது மிகவும் சவாலானது. கோயம்பேடு சந்தையில் இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



