Show all

ஹீலர் பாஸ்கர் என்பவர் கோவையில் கைது! கொரோனா நுண்ணுயிரி குறித்து வதந்தி பரப்பியதாக

கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா என்பது உண்மையில் இலுமினாட்டிகளின் சதித் திட்டம் என்றும் நலங்குத்துறை அதிகாரிகள் சொல்வதை யாரும் கேட்கக்கூடாது என்றும் புலனத்தில் கூறியிருந்தார்.

தொலைக்காட்சியில் மக்கள் இறப்பதைத் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் இந்த செய்தியைப் பார்த்து பயந்து சாகிறவர்கள் 100ல் 30 பேர் இருப்பார்கள். இவர்கள் முதலில் சாவார்கள். இதில் நம்பிக்கை இழந்து இன்னும் 30 பேர் சாவார்கள். மீதம் நம்மைப் போல 30 விழுக்காட்டு பேர் உறுதியாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் நலங்குத் துறை உருப்படாத அறிவுகெட்ட துறை. அந்தத் துறை அதிகாரிகள் வீடுவீடாக வந்து சோதித்து, நமக்கு கொரோனா இருக்கிறதோ இல்லையோ, இருப்பதாகச் சொல்லி கூட்டிக்கொண்டு போவார்கள். மனைவியை அழைத்துச் செல்வதை கணவன் தடுத்தாலும் விட மாட்டாரகள். அவர்களை தனிமைப் படுத்துவார்கள்.

அதாவது சிக்கல் இல்லாதவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், ஊசிபோட்டு சாகடிக்கப் போகிறார்கள். 

கொஞ்ச நாள் கழிச்சு புலனம் இருக்காது. தொலைத் தொடர்பு இருக்காது. எல்லோரையும் தனிமைப்படுத்திவிடுவார்கள். நலங்குத்துறை அதிகாரிகளும் அலோபதி வைத்தியர்களும்தான் காரணம். தப்புனு தெரிஞ்சும் வேறு வழியில்லாமல் செய்கிறார்கள். நாலு நாள் யோசிச்சு என்ன செய்யனும்னு வலையொளியிலே போடுறேன். நான் சொல்றதை செஞ்சா மட்டும்தான் பிழைக்க முடியும் என ஹீலர் பாஸ்கர் கூறியிருந்தார்.

பொது நலங்குத் துறை இணை இயக்குனர் ரமேஷ் குமார் கோயம்புத்தூர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஹீலர் பாஸ்கர் குனியாமுத்தூரில் இன்று கைதுசெய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட பிறகு, கோவை ஏழாவது குற்றவியல் நடுவர் மன்ற அறங்கூற்றுவர் மணிகண்ட ராஜா முன்பாக அணியப்படுத்தப் பட்டார். அவரை 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (03.04.2020) வரை காவலில் அடைக்க அறங்கூற்றுவர் உத்தரவிட்டார்.

மருந்தில்லாமல் குணமளிக்கும் உயிர்சிகிச்சை (ஹீலிங்) என்கிற ஒரு உளவியல் சார்ந்த சிகச்சை முறை குறித்து பேசிவருகிறார். நிஷ்டை என்கிற ஒரு அமைப்பின் மூலம் மக்களிடம் ஒரு தனிவகையான கருத்துப் பரப்புதல் செய்து வருபவர்தான் இந்த ஹீலர் பாஸ்கர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.