Show all

மோடியின் எண்ணிம மயமாக்கல் இதற்காகத்தான் என்பதைப் புரியவைத்து விட்டார் எடப்பாடி: மக்கள்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூன்று மாவட்ட மக்களையும் வீட்டுக்காவலில் வைக்கும் எடப்பாடி அரசின் அடக்குமுறை ஆளுமைக்கு நன்றாகவே கைகொடுத்தது மோடியின் எண்ணிம மயமாக்கல். 

தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டங்களையும், வன்முறைகளையும் உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்கிற எடப்பாடி அரசின் காட்டுதர்பாருக்கு மிக எளிதாகப் பயன்பட்டது எண்ணிம மயமாக்கல்.

போரட்ட நிலையின் உடனுக்குடன்  கருத்துப் பரப்புதல் நோக்கத்தை தடை செய்யும் வகைக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கியுள்ளதால் எடப்பாடி அரசின் ஆணவப் போக்குக்கு எண்ணிம மயமாக்கல் எளிதாக கைகூடியது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், கலவரம், தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, உயிர் பலிகள், மோதல் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு விவரங்களும், புகைப்படங்களும் வாட்ஸ்அப், முகநூல், இணையதளம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவின. துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பலரும் தங்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு, எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாகவும் கருத்துகளை மீள்பதிவிட்டு வந்தனர். அரசுக்கும், காவல்துறைக்கும் எதிரான கண்டனங்களை மக்கள் பதிவு செய்துவந்தனர். 

ஏடப்பாடி அரசு நடத்தும் ஆணவம், அராஜகம், காட்டு தர்பார் உலக அரங்கில் ஆதாரங்களோடு அம்பலமாகி விடக் கூடாது என்பதற்காக இணையதள சேவையை முடக்கி வைக்க சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து இணையதள சேவை முழுக்க முடக்கப்பட்டது.

இந்த 3 மாவட்டங்களிலும் பெரும்பாலான இணையதள சேவையை பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் செல்போன்கள் மூலம் தகவல்கள், புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் பரிமாற்றம் எடப்பாடி அரசு விருமபியது போலவே தடைபட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவசர நிலை காலத்தில்கூட மேற்கொள்ளப்படாத வகையில் தகவல் தொடர்பு சேவையை முடக்கியிருப்பதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். அரசுத்துறை அலுவலகங்கள், இணைய மையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் கூறினர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த வர்த்தகர் தினேஷ் கூறும்போது, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் தொடர்பான தகவல்களை பரிமாற முடியவில்லை. செல்பேசி வங்கிச்  சேவைகள் அனைத்தும் முடங்கியிருக்கின்றன. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிஎஸ்என்எல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் இருந்து இந்த 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை முடக்கியிருக்கிறார்கள். எங்கள் கட்டுப்பாட்டில் எதுவுமில்லை என்றார்.

திருநெல்வேலியில் உள்ள ஏர்டெல் தரவுக் குழுவை சேர்ந்த ஏ.வசந்த் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 1,900, தூத்துக்குடி மாவட்டத்தில் 1,800, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,700 வரையில் அகன்ற அலை இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். இந்த அனைத்து இணைப்புகளுக்கும் இணைய சேவை முடங்கியிருக்கிறது. 

இணையதள சேவை முடக்கத்தால் பனிரெண்டாம் வகுப்பு தேறிய மாணவர்கள் பொறியியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு இயங்கலையில் விண்ணப்பிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில்தான் இதுபோன்று இணைய சேவை முடக்கப்படும். தற்போது தமிழக தென்மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஓ! அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நம்மை அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்து, வீட்டுக் காவலில் வைக்கிற முயற்சிக்குத்தான் எண்ணமமயமாக்கலா! மோடியின் ஒவ்வொரு திட்டமும் இப்படி மக்களை கேவலமாக அடிமைப் படுத்தும் தொலைநோக்கிற்கானது என்பதைப் புரிந்து கொண்டோம் என்கிறார்கள் மக்கள்;.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.