12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒவ்வொரு தமிழனின் அறைகூவல்! எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் மட்டும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி வென்றால் போதும்! அப்புறம் எந்தக் கொம்பனாலும் இந்தியாவை அவரிடம் இருந்து மீட்க முடியாது. 1.எம்ஜியார் 2.நரேந்திரமோடி இவர்களுக்கு இணையான அறிவாளர்கள் உலகில் பிறக்கவும் இல்லை; இனி பிறக்கவும் முடியாது. மக்கள் மனங்களை வெல்வதற்காக, மிக சின்னச் சின்ன நகர்வுகளில் கூட மிக மிக கவனமாக இருந்தவர் எம்ஜியார் அவர்கள். தமிழகத்தில் அரசியலுக்கு வருகிற ஒவ்வொருவரும் எம்ஜியார் அவர்களின் சூத்திரத்தை கற்பதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். எம்ஜியார் வழியில் முயன்றால் தமிழக முதல்வர் ஆகி விட முடியும் என்று ஒவ்வொருவரும் நம்பி காய் நகர்த்துகிறார்கள். ஆனால் அவர் வழியில் பிசிறில்லாமல் நடக்க முடியாமல்தான் தோற்றுப் போகிறார்கள். 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே' என்று ஒரு மனிதன் எப்படி வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்று தமிழ்முன்னோர் கற்றுத் தந்துள்ளதை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் எம்ஜியார் அவர்கள். அவர் தன்னை சான்றோன் ஆக்கிக் கொள்வதற்கு அந்தப் பாடத்தை வாழ்க்கையின் இலக்காக எடுத்துக் கொண்டார் அவர் சான்றோன் உருவாவதற்கான பயிற்சிகளை மட்டுமே நடிப்பில் காட்டினார். தாயை வணங்கினார்; தந்தையை மதித்தார்; அக்கா, தங்கையிடம் பாசம் காட்டினார்; அண்ணன் தம்பிகளை அரவணைத்தார். எதிரிகளைத் திருத்தினார்; தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் எம்ஜியார் அவர்களைத் தங்கள் உறவாகக் கொண்டாடினார்கள். படுத்துக் கொண்டே வென்றார். அவர் சாகும்வரை அவர் பெற்ற வெற்றியை யாராலும் தட்டிப் பறிக்க முடியவில்லை. ஆனானப் பட்ட கலைஞரே அமைதியாகிப் போனார். இப்படி எம்ஜியார் புகழுக்கான அறிவாற்றலைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். அடுத்து நரேந்திர மோடிக்கு வருவோம். தேநீர் கடையில் வாழ்க்கையைத் தொடங்கி, குஜராத் மாநிலத்தின் முதல்வராகி, இந்தியத் தலைமை அமைச்சராகி, ஒவ்வொரு மாநிலமாக தன் கொடியை நாட்டி வருகிறார். இவருக்கு மக்கள் மனங்களைப் பற்றி துரும்பளவும் கவலை கிடையாது. இவரின் முழுமுதற் கவலை இந்தியா முழுவதும் நம்முடைய ஆளுமைக்கு கீழ் எளிதாகக் கொண்டு வந்து விடுவோம். ஆனால் ஆளுவதற்கு விக்கிரமாதித்தியன் போன்று இரண்டாயிரம் ஆண்டு அகவையை பெறுவது எப்படி என்பது மட்டுமே. அதனால்தான் விராட்கோலியின் உடற்தகுதி பற்றிய அறைகூவலை உடனே ஏற்றுக் கொள்கிறார். இவர் நம்புவது முழுக்க முழுக்க கருவி மேலாண்மை. 1.இவர் 2.இவருக்கு முன்னால் ஒரு கருவி. அது போதும் இவருக்கு. ஒரு பித்தானைத் தட்டி இந்தியவைக் கட்டுப் படுத்த முடிந்தால் போதும். அதற்காக இவர் ஒவ்வொரு திட்டத்தையும் 1.எந்த அதிகாரமும் இல்லாத மக்கள் 2.எதைச் சொன்னாலும் கேட்கும் கட்சிக்காரர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள். 3.மோடி. என்ற வகைக்காக மட்டுமே முன்னெடுப்பார். பணமதிப்பிழப்பு, எண்ணிம இந்தியா, இந்த இரண்டு திட்டங்களால் நூறு விழுக்காடும் அவர் விரும்பும் 1.எந்த அதிகாரமும் இல்லாத மக்கள் 2.எதைச் சொன்னாலும் கேட்கும் கட்சிக்காரர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள். 3.மோடி. என்ற அமைப்புக்கு வந்து விட்டது. எடப்பாடியால் மூன்று மாவட்டங்களில் இணையம் முடக்கம், சுயஉதவிக் குழு மகளிர் வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்குத் தெரியாமலே நூறு கோடி அளவிற்கு பணப்பரிமாற்றம் இந்த இரண்டு செய்திகளை மட்டும் பொருத்திப் பாருங்கள். ஒரே வினாடியில் மோடியால் உங்களைப் பிச்சைக்காரராகவும் உலகத் தொடர்புகள் அற்றவராகவும் ஆக்க முடியும். பணத்தாளை வைத்திருந்தால் வைத்திருக்கிற பணத்தாள் அளவிற்கு நீங்கள் அதிகாரி. உங்கள் பணம் வங்கியிலிருந்தால் உங்கள் முழு பணத்திற்கும் மோடிதான் அதிகாரி எத்தனையோ ஆட்சிகளை மத்தியிலும், மாநிலத்திலும் பார்த்திருக்கிறோம். காசு கொடுத்து ஓட்டு வாங்குவது வரை ஏதாவது மக்களுக்கு செய்து ஓட்டு வாங்கி விட முடியும் என்றுதான் கற்று வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால் முதன் முறையாக மோடிதான் மக்களுக்காக ஒரு சிறு துரும்பும் அசைக்காது இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றவர் ஆவார். வரும் நாடளுமன்றத் தேர்தலிலும் அவர் உறுதியாக வெற்றி பெற்றே தீருவார். அதன் பிறகு அவர் விரும்பும் 1.எந்த அதிகாரமும் இல்லாத மக்கள் 2.எதைச் சொன்னாலும் கேட்கும் கட்சிக்காரர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள். 3.மோடி. என்ற நிலையை உருவாக்குவார். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் அது வெளிப்படையாக இருக்கும். யார் வென்றார்கள் என்பதை, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் வாக்குச் சீட்டுக்களையெல்லாம் ஒப்படைத்து யார் வென்றார்கள் என்று எண்ணிச் சொல்லுங்கள் என்றால் சொல்லி விடுவார்கள் அவர்கள். ஆனால் மோடி அதைச் செய்யவே மாட்டார். வாக்கு இயந்திரங்களையே பயன்படுத்துவார். எதைச் சொன்னாலும் கேட்கும் கார்ப்பரேட்டுகளும் அதிகாரிகளும்தானே அதைக் கையாள முடியும். அறைகூவல் கூட விடுப்பார். ஆனால் நம்மவர்களால் ஒரு ஆணியும் கூட பிடுங்க முடியாது. அவர்தான் நிரந்தரத் தலைமை அமைச்சர் என்று ஒப்புக் கொள்வோம். இந்தியா முழுக்க மோடி எதிர்ப்பலை வளர்ந்திருக்கிறதாம். தமிழகத்தில் 75 விழுக்காடாம். இருக்கட்டுமே! தூத்துக்குடியில் 13உயிர்களைப் பறிக்க வில்லையா? மூன்று மாவட்டங்களில் இணையச் சேவையை முடக்க வில்லையா? 1.எந்த அதிகாரமும் இல்லாத மக்கள் 2.எதைச் சொன்னாலும் கேட்கும் கட்சிக்காரர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள். 3.மோடி. என்ற நிலைக்கு முக்கால்வாசி வேலைகள் முடிந்து விட்டன. ஒரேயொரு வேலைதான் பாக்கி இருக்கிறது. வரும் தேர்தலில் மோடிதான் தலைமை அமைச்சர் என்கிற ஒரேயொரு வேலைதான். அதுவும் முடியும். மோடி எதற்காக உலகமெல்லாம் சுற்றி சுற்றி வருகிறார்? உலகச் சட்டங்களை கற்க விரும்புகிறார். ஏந்தமாதிரியான ஆட்சி முறையில் மக்களை நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியும் என்று கற்கிறார். இந்தியாவில் மநுநீதியை அமல் படுத்த எந்த சட்ட அமைப்பு வாகாக இருக்கும் என்று கற்று வருகிறார். மோடி பதவிக்கு வந்து விட்டால் அப்புறம் ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் தான். கட்சிக்காரர்கள் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். மக்கள் எந்த தப்பும் செய்யக் கூடாது. மக்கள் கூலிக்காரர்களாக மட்டும் இருப்பார்கள். கட்சிக்காரர்கள் நிருவாகிகளாக இருப்பாhகள். கார்ப்பரேட்டுகள் முதலாளிகளாக இருப்பார்கள். மோடி மன்னராக இருப்பார். ஒருவேளை வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு என்கிற முயற்சியை முன்னெடுத்து மோடி தோற்டிக்கடிக்கப் பட்டால்தான் உண்டு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



