டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்ட முதல் நாளே சரக்குகளின் விற்பனை அதிரடியாக குறைந்துள்ளமை ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உச்ச அறங்கூற்றமன்ற அனுமதியுடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர் மாவட்டம் நீங்கலாக, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மொத்தம் 163 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்று தீர்த்தன. இதில், மதுரை மண்டலத்தில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு மேல் மது வகைகள் விற்பனை ஆகின. தொடர்ந்து இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 133 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனையாகின. இதனால் மகிழ்ச்சியடைந்த டாஸ்மாக் நிர்வாகம், மது விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகரித்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை மொத்தம் 109 கோடி ரூபாய்க்கு மட்டுமே டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. மது விற்பனை முதலிடத்தில் இருந்த மதுரை மண்டலத்திலும் 28 கோடி ரூபாய்க்கே சரக்கு விற்பனை நடைபெற்றது. முந்தைய இரண்டு நாள்களை ஒப்பிடும்போது சரக்கு விற்பனை கிட்டத்தட்ட 30 விழுக்காடு அளவுக்கு அதிரடியாக குறைந்துள்ளது. இது தமிழக மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, மதுப்பிரியர்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் டாஸ்மாக் மது வகைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நாம் காரணங்கள் தேடவில்லை. டாஸ்மாக் வணிகத்தைப் புறக்கணித்த அந்த மாமனிதர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



