31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விசயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விசயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி தப்பித்தவர்தான் எச்.ராஜா. இந்த முறை தான் பேசிய குரலே தன்னுடையது கிடையாது என்று கூறியுள்ளார். காவல் துறை மற்றும் அறங்கூற்றுமன்றங்களை மோசமான வார்த்தைகளில் பேசியதாக வந்த காணொளியில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று எச்.ராஜா புதிய விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் காவல் துறை இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் அறங்கூற்றுமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார். மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக காவல்;துறையுடன் வாக்குவாதம் செய்தது இணையத்தில் பரவிவருகிறது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா அந்த காணொளிவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள். நான் அதை பேசவில்லை என்று பரவிவரும் காணொளி குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் காவல், அறங்கூற்றுத்துறைகளை மிரட்டும் தொனியில் நான் பேசவில்லை. நான் பேசியது போல வெளிவந்துள்ள காணொளி ஒட்டு வேலை செய்யப்பட்டது. யாரோ காணொளிவை ஒட்டுவேலை செய்து வெளியிட்டுள்ளார்கள். எனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு செய்த செயல் இது என்று குறிப்பிட்டு இருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



