31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் அறங்கூற்றுமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். காவல்துறையையும், அறங்கூற்றுமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். எச்.ராஜா பேசியது மொத்தமும் காணொளிவாக பதிவாகியுள்ள நிலையில், தமிழக காவல்துறை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் காணொளிவில் எச்.ராஜா, காவல்துறைக்கு வெட்கமாக இல்லையா, உங்க காவல்துறை தலைவர் வீட்டுல சோதனை நடந்த அப்பவே நீங்க எல்லாம் சீருடையை கழட்டிட்டு வீட்டுக்கு போய் இருக்கனும். உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா, என்றுமீண்டும் மீண்டும் 'உலகில் உள்ள காவல் துறைகளில் வரலாற்று சிறப்பு பெற்ற காவல்துறையாக இயங்குகிற' தமிழகக் காவல் துறை குறித்து தவறாக பேசியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு கிழமை முன்பு 30 இடங்களில் சோதனை நடந்தது. அதில் முதல்முறையாக தமிழகத்தில் காவல்துறை தலைவர் வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல் காவல்துறை தலைவர் அலுவலகத்திலும் முதல்முறையாக சோதனை நடந்தது. இதைதான் எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பு சில அரசியல்வாதிகள் காவல்துறைக்கு எதிராக வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் இந்த அளவிற்கு யாரும் கொச்சையாக பேசியதில்லை. கோரிக்கையாக மட்டுமே வைத்துள்ளனர். ஆனால் எச்.ராஜா காவல்துறையினரை தவறாக பேசியுள்ளார். இதனால் காவல் துறை இவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



