Show all

ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டப் பேரவை நிகழ்வுகள் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்

தமிழகச் சட்டப்பேரவையில் கடந்த 18-ந் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.

     செயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.

     இந்த நிலையில், சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து சிறைக்குச் சென்றார். சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக (முதல்-அமைச்சர்) எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

     அவரை முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.

     அதன் படி, 18-ந் தேதி சட்டப்பேரவைக் கூட்டப்பட்டது. அரசின் மீது நம்பிக்கை தீர்மானத்தை எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்தார்.

     காலத்தைக் கடத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்திற்காக-

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்தை அறிந்துவந்த பிறகு, இந்த தீர்மானத்தை ஒருவாரம் கழித்து சட்டப்பேரவையில் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க.வினர்

கோரிக்கை விடுத்தனர்

     எப்படியாவது அதிமுகவை உடைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்தித்து, தனிப்பெரும்பான்மைத் தலைவியை இழந்திருக்கிற நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற நம்;பிக்கையில்-

திமுகவினர் காய் நகர்த்துகின்றனர் என்பதைப் புரிந்து கொண்ட பேரவைத் தலைவர் அதனை ஏற்கவில்லை.

     ஆனாலும், அவையில் தி.மு.க.வினர் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கடுமையான அமளி ஏற்பட்டது.

     தி.மு.க.வினரால் புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. ஒலிவாங்கிகள் உடைக்கப்பட்டன. கடுமையான அமளியின் இடையே, இரண்டு முறை அவை நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் ப.தனபால் தள்ளிவைத்தார்.

     அதன் பின்னரும் அமளி நீடித்ததால், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலருக்கு பேரவைத்தலைவர் உத்தரவிட்டார்.

அவர்கள் வெளியேற்றப்பட்டதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர். ஒருவர் ஆகியோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

     பன்னீர் செல்வம் அணியினர் உள்ளிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் இருந்த நிலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அரசுக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 பேர் (ஓ.பன்னீர்செல்வம் அணியினர்) மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ஆட்சி தொடர் கிறது.

     இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், அவையில் தாங்கள் திருவிளையாடல்களைத்  திரித்து ஆளுநரிடம் சென்று புகார் கூறினார். எனவே, அவையில் நடந்த நிகழ்வுகள் குறித்த விவரங்களை தன்னிடம் கொடுக்கும்படி சட்டப்பேரவைச் செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

     அதைத்தொடர்ந்து 20-ந் தேதியன்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், அது சம்பந்தப்பட்ட அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார்.

     இந்த நிலையில், தமிழக சட்டசபையில் 18-ந் தேதி நடந்த சம்பவம் குறித்து விவர அறிக்கை ஒன்றை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.

     நடுவண் அரசுக்கும் அந்த அறிக்கையை ஆளுநர் அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.