Show all

சென்னை மின்சார தொடர்வண்டி விபத்தில் 3 பேர் பலி

பரங்கிமலை- பழவந்தாங்கல் இடையே செல்லும் மின்சார தொடர்வண்டியில் படிக்கட்டில் பயணம் செய்த 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை இயக்குநர் ராமசுப்பிரமணியம் நேரில் சென்று விசாரணை.

     தாம்பரம் - கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார தொடர்வண்டிகளில் காலை நேரங்களில் கூட நெரிசல் காணப்படும்.

     இந்நிலையில் இன்று காலையில் மின்சார தொடர்வண்டியில் பரங்கிமலையில் ஏறிய இளைஞர்கள் சிலர் மின்சார தொடர்வண்டியில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது பழவந்தாங்கலை தொடர்வண்டி நெருங்கும் போது சிலர் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் உடல் துண்டாகி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

     இந்த விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை மருத்துமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து இருப்புப் பாதைத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த இருப்புப் பாதைத்துறை காவல் இயக்குநர் ராமசுப்பிரமணியம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

     சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணி நிமித்தமாக நீண்ட தூரம் செல்லும் பெண்கள், இளைஞர்கள் பெரிதும் விரும்புவது தொடர் வண்டிப் பயணங்களையே. நீண்ட தூரம் என்பதால் அலுப்பு இல்லாமல் பயணம் செய்ய தொடர் வண்டிகளே வசதியாக இருப்பதாக கருதுகின்றனர்.

     மேலும் சென்னை நகரில் வாடகை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சாமானிய மக்கள், கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோர் புறநகரங்களில் குடிபெயர்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்துக்கு அருகே வீடு பார்க்கும் காலம் போய் தொடர் வண்டி நிலையங்களுக்கு அருகே குடிபெயர்ந்து சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

     சென்னை புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது அரக்கோணம், வாணியம்பாடி, வேலூர், திருவள்ளூர், பொன்னரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தொடர் வண்டிகளில் பயணம் செய்தபடி தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் பேருந்துக் கட்டணங்களைக் காட்டிலும் தொடர் வண்டிகளில் மிக மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதாலும், போக்கு வரத்து நெரிசல் காரணமான கால தாமதத்தை தவிர்க்கவும் தொடர்வண்டிப் பயணம் மக்களால் விரும்பப் படுகிறது.

     இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் தொடர் வண்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பயணிகள் நெரிசலில் சிக்கி தவறி விழுந்து பலர் தங்கள் உயிர்களையும், உடல் உறுப்புகளையும் இழந்துள்ளனர். படிக்கட்டு பயணம் பேருந்தில் மட்டும் ஆபத்து இல்லை, தொடர் வண்டிகளிலும்தான் என்பதை இளைஞர்கள் உணர்வது எப்போது? தீர்வு என்ன?

     இதுபோன்று தொடர் வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க காலை, மாலை நேரங்களில் கூடுதல் தொடர் வண்டிகள் இயக்கப்படலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இருப்புப் பாதைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.