கொரோனாவிலிருந்து நிரந்தரமாக விடுபட, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகமூடி மற்றும் கண்ணாடி அணிவோம். அவ்வப்போது கைகளைக் கழுவுவோம். வீட்டிற்கு வெளியே சமூக இடைவெளியை பேணுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம். 14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வேலூர் மாவட்டத்தில் முகமூடி அணியாமல் பொது இடங்களில் காணப்படுவோருக்கு கட்டாயக் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அன்றாடம் நூறுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் அனைவரும் முகமூடி அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் முகமூடி அணியாத நபர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். மேலும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முகமூடி அணியாவிட்டாலோ, சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டாலோ அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினர் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம், தண்டனை என்பதெல்லாம் எப்போதும் இயலாமை சார்ந்த ஒரு மாற்றுவழி நடவடிக்கையே அன்றி ஒரு போதும் சிக்கலுக்கான தீர்வாக அமைந்ததாக வரலாறு ஏதும் இல்லை என்பதே உண்மை. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் முகமூடி அணியாமல் பயணித்த அனைவருக்கும் கட்டாயக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளது ஒரு பயனுள்ள நடவடிக்கையாகும். அதன்பேரில் வேலூர் மண்டித்தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் முகமூடி அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வேலூர் பழைய மீன்சந்தை அருகே வருவாய்த்துறை, காவல் துறையினர் அடங்கிய குழுவினர் முகமூடி அணியும்படி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர். பலமுறை நான் முகமூடி அணியாமல்தானே வெளியே சென்று வந்தேன், பக்கத்தில் யாருக்கும் கொரோனா இல்லையே என்று ஒவ்வொருவரும் முன்னெடுக்கிற நம்பிக்கை நகர்வுகள் தாம் கொரோனாவிற்கு வெற்றியாக அமைந்து- சீனாவின் ஒரு சிறிய கடல் வகை உணவுச் சந்தையில் தொடங்கிய கொரோனா இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவிலிருந்து நிரந்தரமாக விடுபட, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகமூடி மற்றும் கண்ணாடி அணிவோம். அவ்வப்போது கைகளைக் கழுவுவோம். வீட்டிற்கு வெளியே சமூக இடைவெளியை பேணுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



