உத்தரமேரூர் மக்கள் சிவன் கோயிலில் கிடைத்த தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் ஆனால் கோயில் குடமுழுக்கின் போது அந்த நகைகளை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர். 28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரமேரூரில் சோழ காலத்தை சேர்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக இவர்கள் கோயிலின் பெரும்பகுதியை இடித்து விட்டு புதியதாகவே ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளைத் திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு தகவல் சென்ற நிலையில், வருவாய் துறை அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க நகைகள் இருந்தன. மேலும் பழமையான அந்தக் கோவிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அப்போது கோவிலின் நிலைவாசற்படியை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும்போது குவியல் குவியலாக தங்கம் கிடைத்ததாக வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைகளை வாங்க வட்டாட்சியர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். ஆனால் நகைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க போவதாக கூறி நகைகளை அரசிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர் கோயில் குழுவினர். இந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என கோட்டாட்சியர் வித்யா கெடு விதித்தார். இதையடுத்து கிராம நாட்டாமை உள்ளிட்டோர் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். அதில் நகைகளை அரசிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்துள்ளனர். அதாவது கிடைத்த நகைகளைத் தனித்தனியாக அளவீடு செய்து அதை படம் எடுத்து கருவூல பெட்டகத்தில் வைக்க வேண்டும். இதற்கு ஊர் நாட்டாமை, அரசு அதிகாரிகள் இணைந்து கையெழுத்திட்டு கிராம மக்கள் முத்திரையிட்டு அந்த நகைகளைப் பாதுகாக்க வேண்டும். திருப்பணியின் போது தங்களிடம் அந்த நகைகளை மீண்டும் அரசு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் போது அந்த நகைகளை அரசு முன்னிலையில் அதே நிலைவாசல்படிக்கு அடியில் வைத்து விடுகிறோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



