இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். 28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 834 ல் இருந்து 911 ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்புச் சோகத்தின் எண்ணிக்கையும் 8 லிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த 71 அகவை மூதாட்டி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சண்முகம் கூறினார். சமூக விலகலை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், நடுவண் அரசின் நிதியை மட்டும் நம்பி எதிர்பார்த்து காத்திருக்காமல் மாநில அரசின் நிதியை கொண்டும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2-வது கட்டத்தில் தான் இருப்பதாகவும், இன்னும் 3-ம் நிலையை தமிழகம் எட்டவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



