நேற்று நடைபெற்ற நடுவண் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பேருந்துகளை இயக்கியும், தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களிலேயே ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்றிலிருந்து அந்தந்த மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவுசெய்தது. ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் தொடங்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற நடுவண் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பேருந்துகளை இயக்கியும், தமிழகத்தில் அந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிலேயே ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் இரண்டு கிழமைகளில் நடுவண் அரசின் அடாவடி நீட்தேர்வும் நடக்கவுள்ளது. நடுவண் பொறியியல் தேர்வில் நிகழ்ந்துவிட்ட ஐம்பது விழுக்காடு மாணவர் கலந்து கொள்ளாமை இதிலும் நடந்துவிடக்கூடாது என்கிற அக்கறை காரணமோ என்னமோ- இன்று மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் திங்கட்கிழமையிலிருந்து மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளது. நம்ம அதிமுக அரசுக்கு- பாஜக பாம்பும் சாகக் கூடாது, தமிழக மக்கள் தடியும் உடையக்கூடாது என்கிற அக்கறையாவது இருக்கிறதே என்று ஏற்றுக் கொள்வோம். ஆனாலும் பொதுப் போக்குவரத்தை தமிழக மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் கையாளவேண்டும். ஏனென்றால் பொருளாதார சரிவை சரிசெய்ய வேறு வழியில்லாமல், தற்போது மாநில அரசும் கொரோனாவிற்கு மக்களைக் கைக் கழுவி விட்டது. தொடர்வண்டிப் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையிலான தொடர்வண்டிப் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்திற்குள்ளும் பயணியர் தொடர்வண்டிப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. சென்னைக்குள் இயங்கும் மெட்ரோ தொடர்வண்டி சேவைகளும் வரும் திங்கட் கிழமையிலிருந்து செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



