18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் மேலும் இணையத்தில் புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த கூகுள் நிறுவனம். கூகுள் சேவையில் மின்அஞ்சல், வலையொளி, கூகுள்கூடல் கூகுள்இயக்கம், கூகுள்ஆவணம், கூகுள்தரைப்படம் போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர், விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் எண்ணிமபணச்சேவை துறை மக்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'ஜிபே' எண்ணிமபணச்சேவை வசதியானது, மிகவும் பயனுள்ள வகையில், இந்தத் துறையில் நடப்பில் உள்ள எந்த நிறுவனங்களை விடவும், எளிமையாகவும் சிறப்பாகவும் நம்பகமாகவும் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அதன்படி ஒரு ட்ரில்லயன் டாலர் இலக்குடன் எண்ணிமபணச்சேவை வழங்கும் திட்டத்தை கடந்த கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள், தம் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவியும் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க விருக்கிறது. இது நமது மாநில அரசோ, நடுவண் அரசோ கூட நம் மீது நம்பிக்கை கொள்ளாத திட்டமாகும். மக்கள் நீதான்யா கடவுள் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூகுளைப் பாராட்டத் தொடங்கி விட்டார்கள். இந்த 'ஜிபே' செயலி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும் மிகச்சில ஆவணங்களை மட்டும் வழங்கி வங்கியின் ஒப்புதல் பெற்றுவிட்டால் போதும், அடுத்த சில மணிநேரங்களில் கடன் தொகை வங்கி கணக்கில் வைப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக 22மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த 'ஜிபே' செயலி பயன்படுத்தி வருகின்றனர், மேலும் இந்த செயலியில் 2000-க்கும் அதிகமான இயங்கலை வர்த்தக நிறுவனங்களும், 15 ஆயிரம் சில்லரை வர்த்தக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



