Show all

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நிகழ்ந்த தீ விபத்து பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் திருச்செந்தூரில் கட்டடம் இடிந்த நிலையில் இப்போது மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதல் மீனாட்சியம்மன் கோவிலில் அம்மன் மற்றும் சுவாமி சந்நிதிகளில் நேற்று இரவு பூசைகள் முடிந்து வழக்கம்போல் நடை சாத்தப்பட்டு வெளிப்பிரகார கதவுகள் அடைக்கப்பட்ட பின்னரே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே, ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்கிருந்த நெகிழி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் பற்றிய தீ சற்று நேரத்தில் மற்ற கடைகளுக்கும் பரவியது. ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும், 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. தீயின் வெப்பம் காரணமாக, ஆயிரம் கால் மண்டபத்தின் மேற்கூரைகளில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு நொறுங்கி விழுந்தன.

ஆயிரங்கால் மண்டபத்தில் பழமையான பொருட்கள், பழங்கால சிற்பங்கள், ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று நடந்த தீ விபத்தில் இந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. விபத்து நிகழ்ந்தது இரவு நேரம் என்பதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உயிர்சேதம் ஏற்படவில்லை என்று கூறினாலும் நூற்றுக்கணக்கான புறாக்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்து குறித்து ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்துக்குக் காரணம் கோவிலுக்குள் கடைகள் வைக்கப்பட்டிருப்பதே என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாகும். இந்த தீ விபத்து கடைகளில் இருந்து பரவியதா? அப்படி எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பழமையான சிலைகள், பொருட்களைப் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் ஆயிரம் கால் மண்டபம் அருகே நிகழ்ந்த தீ விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,687

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.