Show all

அம்மாடியோவ் ஒருவழியாக முழுமையாக துப்பு துலங்கியது! குளிரூட்டுக் கருவி வெடித்ததான போர்வையில் கொலை முயற்சி

விஞ்ஞானத் தொழில் நுட்பக்கருவிகளில் ஏற்படும் விபத்தை சாதகமாக்கிக் கொண்டு, புதிய வழிகளை கண்டு பிடித்து பாதுகாப்பாக குற்றம் புரிவோரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருவது சமூகத்தின் அவலம்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்த ராஜி அகவை 60. இவர் அதிமுக பிரமுகரரக அறியப் படுகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த குளிரூட்டுக் கருவி வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி அகவை 52, இளையமகன் கவுதமன் அகவை 27 ஆகியோர் இறந்ததாகச் செய்தி வெளியானது. 

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், மின்கசிவிலிருந்து பாதுகாப்பு, குளிரூட்டுக் கருவி பராமரிப்பு, பாதுகாப்பு முன்நடவடிக்;கை என்று பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றல் நிகழ்ந்தது. அம்மாடியோவ் ஒருவழியாக முழுமையாக துப்பு துலங்கியது; விஞ்ஞானக் கருவிகள் சமூக வலைதள ஆய்வுகளில் இருந்து தப்பித்தன.

திண்டிவனம் காவல் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில், ராஜியின் கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இது விபத்து அல்ல கொலை என காவல் துறையினர் முடிவு செய்தனர்.

இதில், மூத்த மகன் கோவர்த்தனன் மீது காவல்துறையினருக்கு ஐயம் எழுந்தது. இதன்படி, சம்பவம் நடந்த வீட்டில் அடுத்த அறையிலிருந்த ராஜி, கலைச்செல்வி தம்பதியரின் மூத்த மகனான கோவர்த்தனன் அகவை 30. இவரும் அதிமுக பிரமுகராக அறியப் படுகிறார். மற்றும் அவரது மனைவி தீபா காயத்ரி அகவை 24 ஆகியோரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பெற்றோர் மற்றும் சகோதரனை தீ வைத்து கொன்றதாக கோவர்த்தனன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுபற்றி, காவல்துறையினரிடம் கோவர்த்தனன் கூறியதாவது: எனது பெற்றோர் சிறுஅகவையில் இருந்தே எனது தம்பி மீதுதான் பாசம் வைத்து வந்தனர். என்னிடம் அவர்கள் ஒருபோதும் பாசமாக இருந்ததில்லை. எனினும், நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வந்தேன். அதன்பின்னர் தனியாக தனிப்பயிற்சி வகுப்பு நடத்தி வந்தேன். அதில் நட்டம் ஏற்பட்டதையடுத்து தனிப்பயிற்சி கல்வி நிறுவனத்தை மூடிவிட்டேன். இப்போது, 2 கார்களை வைத்து பயணஏற்பாட்டகம் நடத்தி வருகிறேன்.

இதனிடையே கடந்த 7 மாதத்துக்கு முன் நடந்த எனது திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தினர். ஆனால், தற்போது, எனது தம்பி கவுதமுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இது எனக்கு அவர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது. மேலும், அனைத்து சொத்துக்களையும் கவுதமுக்கு எழுதி வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் என் மீது பாசம் இல்லாத பெற்றோர், தம்பி ஆகியோர் இருப்பதைவிட சாவதே மேல் என எண்ணினேன். 
இதையடுத்து, 3 பேரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என திட்டம் தீட்டினேன். கடந்த செவ்வாய்க் கிழமை இரவு பெற்றோரும், தம்பியும் ஒரே அறையில் தூங்க சென்றனர்.

திட்டமிட்டபடி, பீர்பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி செய்து வைத்திருந்தேன். அதிகாலை 3 மணி அளவில் எனது பெற்றோர் மற்றும் தம்பி படுத்திருந்த அறையில் பெட்ரோலை ஊற்றினேன். பின்னர் ஏற்கனவே பெட்ரோல் ஊற்றி வைத்திருந்த பீர்பாட்டிலில் தீயை பற்ற வைத்து, அறையில் வீசினேன். இதில், பாட்டில் வெடித்து அறை முழுவதும் தீப்பிடித்தது. மேலும் அவர்கள் யாரும் தப்பி விடகூடாது என்பதற்காக வெளிப்பகுதியில் தாழ்ப்பாள் போட்டேன். இதனிடையே தீக்காயங்களுடன் பின்பக்க கதவு வழியாக தப்பித்து மெயின் கேட் அருகே தந்தை ராஜி வெளியே வந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான்  மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். பின்னர் குளிரூட்டுக் கருவி வெடித்ததாக நாடகம் ஆடினேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

இக்கொலை சம்பவத்தில் கோவர்த்தனன் அவரது மனைவி தீபா காயத்ரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பின்னர், 2 பேரையும் திண்டிவனம் அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தி கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.