ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக தீயாக இயங்கி வந்ததைப்போல, தற்போது தமிழகத்தில் தீயாக இயங்கி வருகிற கட்சி சீமானின் நாம்தமிழர் கட்சி. இரஜினி தொடங்கவிருக்கிற புதிய கட்சி, சீமான் பாணியில் கட்சியின் பொறுப்புகளை அறிவித்திருக்கிறது. 19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அரசியலுக்கு இரஜினி வருவார்; இல்லை வர மாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இரஜினிகாந்த். தொடர்ந்து பலமுறை கொண்டாடிகள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புகள், இரஜினி வருவார், இல்லை வரமாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 16,மார்கழி (டிசம்பர்31) கட்சி குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார் இரஜினி. தொடர்ந்து, இதழியலாளர்களைச் சந்தித்த இரஜினி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்திருப்பதாக அறிவித்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் வேதாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்டவர். இவர், ஒரு பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் கீச்சுப் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் இவர் தலைமையிலான குழுதான் கவனித்துவருகிறது. தமிழக பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், ரஜினியின் புதிய கட்சியில் பொறுப்பேற்றதால், பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அளித்துள்ள மடலை ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து தமிழருவி மணியன். இவர் பள்ளி ஆசிரியராக இருந்தவர், காமராசரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். காமராசரின் மறைவுக்குப் பிறகு ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து, லோக்சக்தி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் பயணித்துவந்தவர், ஒரு காந்தி பிறந்தநாளில், காந்திய மக்கள் இயக்கம் எனும் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றி, கடந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், 2,000 வாக்குகளுக்குக் கீழ் வாங்கினால் பொதுவாழ்க்கையைவிட்டு விலகுவதாக அறிவித்தார். முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், சில காலம் பொது வாழ்விலிருந்து ஒதுங்கயிருந்தவர், இரஜினி தன்னைச் சந்திக்க விரும்பிய செய்தி அறிந்ததும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேரில் சந்தித்தார். தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் இரஜினிக்கு ஆதரவாகப் பேசிவந்தார். இரஜினியின் அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டுவந்த அவர், தற்போது புதிய கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் கட்சிகள் தொடங்கப்படும்போது, தலைவர், பொதுச்செயலாளர் போன்ற பதவிகள்தான் உயரிய பதவிகளாக இருக்கும். அதிமுகவில்கூட ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளெல்லாம் கொண்டுவரப்பட்டன. ஆனால், தமிழக அரசியல் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி இருக்கிறது. சீமான் அந்தப் பொறுப்பை வகித்துவருகிறார். அந்தக் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்களாகப் பலர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக, இரஜினி தொடங்கப்போகும் கட்சியில்தான், தலைமை ஒருங்கிணைப்பாளர் எனும் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இரஜினி கட்சியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பலர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல, தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வையாளர் எனும் பொறுப்பு இதுவரை எந்தக் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



