இன்றைய ஞாயிற்று மறைப்பை முன்னிட்டு- தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்று மறைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இராகு, கேது என்ற பாம்புகள் ஞாயிற்றை விழுங்குவதால், நிலாவை விழுங்குவதால், ஞாயிற்று மறைப்பு, (கிரகணம்) நிலா மறைப்பு எல்லாம் தோன்றுகிறது என்று ஆரியர்கள் தங்கள் கற்பனையை அவிழ்த்து விட்டது வடஇந்தியப் பகுதிகளில் இன்னும் நம்பப்பட்டுதாம் வருகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலையில்லை. இன்று ஞாயிற்று மறைப்பு, காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிகழ்ந்தது. ஞாயிற்று மறைப்பின்போது இந்தியாவின் சில மாநிலங்களில் சூரியன் வளைய வடிவில் தெரிந்தது. தமிழகத்தில் பகுதி ஞாயிற்று மறைப்பாகத் தெரிந்தது. அதிகபட்ச மறைப்பு 11.40 மணி முதல் 12.10 மணியாக இருந்தது. தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்று மறைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு ஒளிமறைப்பு கருப்புக் கண்ணாடிகளை வழங்கி ஞாயிற்று மறைப்பைப் பார்த்து மகிழச் செய்தனர். மேலும், உலக்கையை நிற்க வைத்தும் காட்டினர். வானவியல் கருத்தாளரும், தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான ஜெயமுருகன், ஞாயிறு நிலவு, பூவி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஞாயிற்றின் வெளிச்சம் புவியில் படாமல் நிலவு மறைக்கும். அப்போதுதான் ஞாயிற்று மறைப்பு ஏற்படுகிறது. இது வானில் நடக்கும் இயல்பான நிகழ்வு. ஞாயிற்று மறைப்பின் போது வெளியே வரக் கூடாது; சமையல் செய்யக் கூடாது; சாப்பிடக் கூடாது; தண்ணீர் குடிக்கக் கூடாது; கர்ப்பிணிப் பெண்கள் பணிகள் செய்யக்கூடாது; ஞாயிற்று மறைப்பின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். ஞாயிற்று மறைப்பு, முடிந்ததும் கீழே விழுந்துவிடும் என்றெல்லாம் பல மூடநம்பிக்கைகள் பரப்பப் பட்டிருக்கின்றன. அனைத்துமே பொய். ஞாயிற்று மறைப்பின் போது சமைக்கலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதேபோல ஞாயிற்று மறைப்பின் போது மட்டுமல்ல, உலக்கை எப்போது நிற்க வைத்தாலும் நிற்கும். ஞாயிற்றின் வெளிச்சத்தை நிலவு மறைத்தால் ஞாயிற்று மறைப்பு நிலவின் வெளிச்சத்தைப் புவி மறைத்தால் நிலவுமறைப்பு இது இயல்அறிவுச் செய்தி. இவற்றையெல்லாம் மக்களுக்கு விளக்குவதற்காகக் கிராமம்தோறும் இயல்அறிவு இயக்கம் மூலமாகக் ஞாயிற்று மறைப்பின் போது வெளியில் பொங்கல் வைத்துச் சாப்பிட்டும், உலக்கையைச் செங்குத்தாக நிற்க வைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



