Show all

நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை! சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணைக்கு ஏற்றது

காவல்துறை நண்பர்கள் என்ற ஒரு இயக்கத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிற நிலையில்- நமக்கேன் வம்பு என்று பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து விட்டு, வழக்கை நடுவண் அரசிடம் ஒப்படைத்துவிட்டு நல்லபிள்ளையாக தமிழக அரசு விலகி நிற்கிறது. 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தில் செல்பேசி கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்தது.

இதை ஏற்ற அறங்கூற்றுமன்றம், அதுவரை குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை காவலர்கள், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சிறிதர், துணை காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் வழக்கு விசாரணையை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், வழக்கு விசாரணையை நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை ஏற்றுக்கொள்வதாக தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மிகுந்த பரபரப்புடன் கையாளப்பட்ட இந்த வழக்கு, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப் பட்ட நிலையில், இனி கமுக்கமாகிவிடும் என்று பேசப்படுகிறது. கொரோனா போராட்டமே பெரிதாக இருக்கிற நிலையில்- சாத்தான் குளம் காவல்துறையில் சிலரின் அடாவடி தங்கள் கையை மீறிய நிலையில்- காவல்துறை நண்பர்கள் என்ற ஒரு இயக்கத்தின் தலையீடு இதில் இருக்கிற நிலையில்- நமக்கேன் வம்பு என்று பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து விட்டு, வழக்கை நடுவண் அரசிடம் ஒப்படைத்துவிட்டு நல்லபிள்ளையாக தமிழக அரசு விலகி நிற்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.